எனக்கும் ஒரு லிமிட் இருக்கு, என் மகன் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது; நெருக்கமான காட்சிகள் நடிப்பது பற்றி மனம் திறந்த காஜல் அகர்வால்

‘டாக்சிக்’ (Toxic) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ சமீபத்தில் வெளியானது. இதில் நடிகர் யஷ் மற்றும் நடிகை கியாரா அத்வானி இடம்பெற்றுள்ள நெருக்கமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, அந்த காட்சிகளுக்காக கியாரா அத்வானி அதிகளவில் விமர்சிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

சமீபத்தில் அளித்த பேட்டியில், “திருமணமான பிறகு நடிகைகள் நெருக்கமான அல்லது ‘போல்ட்’ காட்சிகளில் நடித்தால் ஏன் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார்கள்? ஆனால் அதே காட்சிகளில் நடித்த ஆண் நடிகர்கள் பெரும்பாலும் பாராட்டப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?” என்று காஜலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது முழுக்க முழுக்க தனிப்பட்ட தேர்வு. ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை அவரவர் மனசாட்சிப்படி முடிவு செய்ய வேண்டும். பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் பொதுவாக அதிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள்,

நான் என்னைப் பற்றித்தான் பேச முடியும். இதுவரை நெருக்கமான காட்சிகளில் நடித்ததில்லை. அதேபோல், எனக்கு வசதியாக இல்லாத உடைகளை, உதாரணமாக பிகினி போன்ற ஆடைகளை அணிந்து நடித்ததுமில்லை. அப்படிப்பட்ட பல பெரிய பட வாய்ப்புகளையே நான் நிராகரித்திருக்கிறேன். அதனால் எந்த வருத்தமும் இல்லை. அது என் தனிப்பட்ட எல்லை. அந்த எல்லையை நான் ஒருபோதும் தாண்ட விரும்பவில்லை,” என்று தெளிவாகக் கூறினார்.

தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்துள்ள காஜல் அகர்வாலுக்கு, நான்கு வயது மகன் நீல் கிட்ச்லு உள்ளார். தாயான பிறகு தனது படத் தேர்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “என் மகன் வளர்ந்து என் படங்களைப் பார்க்கும்போது எந்தவித சங்கடமும் அடையக் கூடாது என்பதுதான் என் விருப்பம். ‘அம்மா ஏன் இப்படிப்பட்ட காட்சிகளில் நடித்தார்?’ என்று அவன் நினைக்க வேண்டாம். அவன் பெருமையுடன் என் படங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தற்போது கதைகளை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறேன்,” என்று காஜல் கூறினார்.

இதற்கிடையில், ‘டாக்சிக்’ படத்தில் நடித்துள்ள நடிகர் பெனடிக்ட் கேரெட், கியாரா அத்வானியை மட்டும் குறிவைத்து விமர்சிப்பவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். யஷின் தோற்றத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால் அதே காட்சிகளில் நடித்த கியாராவை மட்டும் விமர்சிக்கிறார்கள். ‘இப்போதுதான் திருமணம் ஆனார், குழந்தைக்கு அம்மா ஆனவர், கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இல்லாமல் யஷுடன் ஹனிமூனில் இருப்பது போல இருக்கிறது’ என்று கேலி செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

யஷுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது ஏன் பெண் நடிகைக்கு மட்டும் விமர்சனம்? நடிகர்களின் வேலை என்பது கேரக்டர்களை உயிர்ப்பித்து, கதையை நம்ப வைப்பதுதான். அதை தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில், காஜல் அகர்வால் அடுத்ததாக ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ஷ்ரேயஸ் தல்படே கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Source link