ராஜபாளையம்: ”எனது தொகுதிக்குள் கால் வைக்க விட மாட்டேன்,” என, த.வெ.க., ஒன்றிய செயலரை அமைச்சர் ஜெகதீஸ்வரி அலைபேசியில் மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி வ.உ.சி., நகரைச் சேர்ந்த ராஜகுரு த.வெ.க., சாத்துார் தொகுதி மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தம் எடுத்து வேலைசெய்து வருகிறார்.
ராஜபாளையம் எம்.எல்.ஏ.,ஆக வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரி அமைச்சராவதற்கு முன் ராஜகுருவுடன் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் தற்போதைய அமைச்சர் ஜெகதீஸ்வரி ராஜகுருவிடம் பேசுகையில், ”சாத்துாரைச் சேர்ந்த மற்றொரு ஒன்றிய செயலர் லட்சுமணனுக்கு ராஜபாளையத்தில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து லட்டு கொடுக்க யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது. ஒன்றியம் மூன்று, நான்காக இருக்கிறது. அதை ஒன்றாக சேர்த்து ஒப்பந்தங்களை எனக்கு வழங்க வேண்டும் என நீங்கள் கேட்டதாக எனக்கு தகவல் வந்தது.
என் தொகுதியில் அதிகாரிகளிடம் ஏதும் பேசினால் போலீசில் புகார் அளித்து தொலைத்து விடுவேன். என்னை ஆரம்பத்தில் இருந்தே அவர் சீண்டிக் கொண்டுள்ளார். ஏற்கனவே பொதுச் செயலாளர் சத்தம் போட்டார். என் தொகுதிக்குள் அந்த பையன் வர யார் அதிகாரம் கொடுத்தார். போலீசில் துாக்கி வைத்து ஜட்டியோடு அடித்து கொன்று விடுவேன். ரிப்போர்ட்டராக இருக்கும்போதே என்னிடம் வேலைக்காகாது. என்னை பார்த்தால் பைத்தியக்காரி மாதிரி தெரியுதா அவனுக்கு. எனது தொகுதிக்கு ள் சாத்துார் தொகுதிக்காரர்களை கால் வைக்க விட மாட்டேன், ” என்கிறார்.
இந்த ஆடியோ குறித்து இரு நாட்களுக்கு முன் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ”சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிய தவறான செய்திகளை நம்ப வேண்டாம். எதிர்க்கட்சியின் சூழ்ச்சியால் ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்,” என பேசினார்.
சில நாட்களுக்கு முன் சத்திரப்பட்டியில் டாஸ்மாக் பார் உரிமம் பெற ராஜகுரு லஞ்சம் கேட்பதாக கூறி பிளக்ஸ் வைக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் ராஜகுரு கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
