“என்னை விட கார்த்தியால் நல்ல படங்களை செய்ய முடிகிறது…”

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதனை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்க கார்த்தி மற்றும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள்  நடித்துள்ளனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசியதாவது, “ஒரு நடிகருக்கு அவரை விட அவர் நடித்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டால் அது ஒரு ஆசீர்வாதம் போல. அந்த வகையில் கார்த்தியை தாண்டி அவர் நடித்த சர்தார் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படுகிறது. என்னை விட கார்த்தியால் நல்ல படங்களை செய்ய முடிகிறது. அதில் சர்தார் ஒரு முக்கியமான படம். அதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். 

கார்த்தியுடைய வழி தனிவழி. என்னிடமே நிறைய பேர், என்னை பற்றி பேசாமல் கார்த்தியின் ரசிகன் என சொல்லியிருக்கிறார்கள். என்னையை விட ஆழமாக சினிமாவை பற்றி யோசிக்கிறவர் கார்த்தி. அன்பு கொடுக்கிறவர்களுக்கு உண்மையாக இருக்க நினைப்பவர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய உழைப்பை போடுகிறார். இந்த படத்தின் டீசர் சர்வதேசத் தரத்தில் இருக்கிறது. உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியிருந்த முதல் பாகம், சமீப காலத்தில் தமிழ் சினிமா பார்க்காத ஒரு ஸ்பை த்ரில்லர் படம். இயக்குநர் பி.எஸ்மித்ரன் முதல் பாகத்தில் பெரிய விவாதத்தை எடுத்து வந்தார். இரண்டாம் பாகத்திலும் அதை எடுத்து வருவார் என நம்புகிறேன்” என்றார்.  

Source link