பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும், இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் பிரபல காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.
சின்னத்திரையில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இதில் 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், நாளை (செப்டம்பர் 6) 10-வது சீசன் தொடங்க உள்ளது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 மற்றும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து 10-வது சீசனும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரமோக்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சாதாரண மக்களும் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில், காமன்மேன் ஆடிஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் சாம்பியன்கள் ஆரி, ராஜூ உள்ளிட்ட சிலர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற சிலர் சர்ச்சையாக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அது குறித்து வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் நாளை மாலை 6 மணியில் இருந்து தொடங்க உள்ள நிலையில் வழக்கம் போல் ஸ்டார் விஜய் டிவி இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பிரபல காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று ஜாய் கிரிசில்டா விளக்கம் அளித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக அவர், தனது மகனின் வயதை கூறியுள்ளார். அவர், நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
என் குழந்தை ராகா இன்னும் மிகவும் சிறியவன். அவனை விட்டுவிட்டு செல்வது சரியாகத் தோன்றவில்லை. எனவே இந்த வாய்ப்பை நிராகரித்தேன்; என்னைப் பொறுத்தவரை என் குழந்தைதான் முன்னுரிமை (Priority)” என்று விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைக்கான உரிமைகளுக்காக போராடிய வீர பெண்மணி என்று நெட்டிசன்களால் பாராட்டப்பட்ட ஜாய் கிரிசில்டா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்ற செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நிலையில், தற்போது அவர் விலகியதாக கூறியுள்ளது எதிர்பார்ப்பை குறைத்துள்ளது.
