பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்கள் மதுரையில் காலமானார். அவரது மறைவு தமிழ் உலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாலமன் பாப்பையா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான தமிழறிஞர்களும், பிரபலங்களும் நேரில் வந்திருந்தனர். அப்போது, சாலமன் பாப்பையாவுடன் நீண்ட காலம் இணைந்து பயணித்த பேச்சாளர் பாரதி பாஸ்கர், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியின் மீது விழுந்து கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. மேலும், அவருடன் பல காலமாக மேடைகளைப் பகிர்ந்து கொண்ட பட்டிமன்ற நடுவர் ராஜா, கண் கலங்கியவாறு சாலமன் பாப்பையாவுடன் தனக்கு இருந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு பேசினார்.
“சாலமன் பாப்பையா ஐயாவுடன் எனக்கு இருந்த தொடர்பு சாதாரணமானதல்ல; அவருடன் நான் பல வருடங்கள், ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்திருந்தேன். அவர் மேடையில் பேசும்போது, அவரது கையில் இருக்கும் பொருட்களை வாங்கி பையைத் தூக்கிக்கொண்டு, ஒரு சாதாரண ரசிகனாகத் தரையில் உட்கார்ந்து பார்த்தவன் நான். உலகம் முழுக்க இருக்கிற மக்கள் அவரை எப்படி நேசித்தார்கள், அவருக்குக் கிடைத்த பாராட்டுக்களையும் அன்பையும் நான் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவருக்குக் கிடைத்த எல்லா மேன்மைகள் மற்றும் விருதுகள் அனைத்திலும் நானும் கூடவே இருந்திருக்கிறேன்.
ஒன்றுமே இல்லாத 70, 80-களில் நானும் அவரும் பஸ் மற்றும் ரயில்களில் பயணம் செய்திருக்கிறோம். அந்த கடுமையான பயணங்களைக்கூட அவர் எப்போதுமே சந்தோஷமாகத்தான் ஏற்றுக்கொள்வார். சில நேரங்களில் நான் எதையாவது பார்த்துவிட்டு, “இது சரியில்ல, அது சரியில்ல” என்று கோபப்படுவேன்; ஆனால், அவர் ஒரு நாளும் அப்படிச் சொன்னதே கிடையாது. “ஏழைகளையா… அவன் கஷ்டப்பட்டு ஒரு நிகழ்ச்சி பண்றான்யா, அங்கே போய் நமக்கு அது வேணும், இது வேணும்னு கேட்கக்கூடாதுயா. இருக்கிறதை வச்சு அனுசரிச்சுப் போகணும்யா. மேடையில என்ன பேசுறோமோ அதுக்கு நம்ம தயாரா இருக்கணும்” என்று எனக்குச் சொல்லித் தருவார்.
‘அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே’ என்று 13 ஆண்டுகள் சன் டிவி வாயிலாகத் தமிழ் மக்களைத் தினம் காலையில் எழுப்பி இலக்கியம் சொன்னவர் அவர். என்னையும் பாரதியையும் தன் சொந்தக் பிள்ளைகளாகவே பார்த்துக்கொண்டார். ஒரு நாள் கூட எங்களைக் கடிந்து பேசியதே கிடையாது; “பிள்ளைகளா வாங்க…” என்றுதான் அன்போடு அழைப்பார். அவருக்குக் கிடைக்கும் அதே மரியாதை அந்த மேடையில் இருக்கும் மற்ற எல்லாப் பேச்சாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர். “நான் மட்டும்தான் நடுவர் என்ற உயரத்தில் இருப்பேன், நீங்க எல்லாம் கீழே இருங்க” என்று அவர் எப்போதுமே நினைத்ததில்லை.
இந்தக் கூட்டத்தில் இருக்கிற மோகன் சார், மீரா மேடம் உள்பட பலரும் ‘கல்யாண மாலை’க்காக எங்களை உலகம் முழுக்கக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. சில நேரங்களில் நல்ல சாப்பாடு கூட கிடைக்காது, அப்போைகூட, “எல்லா ஒன்னும் இல்லையா, கொஞ்ச நேரம் பாத்துக்கலாம்யா” என்று அனுசரித்துப் போவார். அப்படிப் பழகுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.
தமிழ் சமூகம் எப்போதும் நினைத்துப் போற்ற வேண்டிய ஒரு தமிழறிஞர் அவர். அரசாங்கம் எத்தனையோ விருதுகளைக் கொடுத்திருக்கலாம், எத்தனையோ விஷயங்களைச் செய்திருக்கலாம்; ஆனால், அதையெல்லாம்விட மக்கள் மனசுல, “எங்க வீட்ல ஒரு உறுப்பினர், எங்க தாத்தா, எங்க அப்பா” அப்படின்னு அவரை நினைக்கிறாங்க பாருங்க, அதைவிட பெரிய விருது அவருக்கு வேற எதுவுமே இல்லை!
தமிழ் உள்ளவரை, மகாகவி பாரதியின் நினைவுகள் இருக்கிற வரை தமிழறிஞர் பாப்பையா அவர்களின் நினைவும் நிலைத்திருக்கும். அவரோடு இருந்த காலம் எங்களுக்குப் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றுதான் நினைக்கிறேன். நானும் பாரதியும் அந்த வகையில் ரொம்பவும் பேர் பெற்றவர்கள். நான் சுமார் 52 வருடங்களும், பாரதி 25-26 வருடங்களும் அவருடன் பயணம் செய்திருக்கிறோம்.
இப்போது அவர் இல்லை என்பது ஒரு பெரும் வெறுமைதான். அந்த வெறுமையையும் தாங்கிக்கொண்டுதான் ஆக வேண்டும்; அதுதான் தமிழ் இலக்கியம் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. மீரா மேடமும் மோகன் சாரும் 26 வருஷங்கள் அவருடன் பயணித்தவர்கள். அதனால்தான் அவர்களால் அங்கிருந்து ஓடிவந்து இங்கே நிற்க முடிகிறது. நாமெல்லாம் ஒரு குடும்பம்; எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரை நாங்கள் இழந்திருக்கிறோம். இந்தத் துயரம் தமிழ் மக்கள் அனைவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்”
இவ்வாறு ராஜா கண்ணீர்மல்க அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
