‘எம்.எல்.ஏ-க்களைக் கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா?’

பதவியில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ-வைக் கைது செய்வதற்கு காவல்துறை அல்லது எந்தவொரு சட்ட அமலாக்க அமைப்பும் சட்டப்பேரவை சபாநாயகரிடமோ அல்லது சட்டப்பேரவை செயலகத்திடமோ முன் அனுமதி பெற வேண்டிய சட்டப்பூர்வத் தேவை ஏதுமில்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாக டிடி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால் சபாநாயகர் அனுமதி இன்றி தன்னைக்கைது செய்யக் கூடாது என அவர் வாதிட்ட நிலையில், “எம்.எல்.ஏ-க்களைக் கைது செய்ய சபாநாயகர் அல்லது சட்டப்பேரவை செயலகத்தின் முன் அனுமதி பெற வேண்டிய சட்டப்பூர்வத் தேவை ஏதுமில்லை” எனத் தமிழ்நாடு சட்டப்பேரவை அதிகாரிகள் அதிரடி விளக்கம் அளித்துள்ளனர்.

கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராக அவதூறாகப் பேசியதாகக் கூறி, விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் திங்கள்கிழமை காலையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால் தன்னைத் கைது செய்வதற்கு முன்னதாக போலீசார் சபாநாயகரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று மார்க்கண்டேயன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால், சட்டப்பேரவை அதிகாரிகளின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

இது குறித்து சட்டப்பேரவை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு எம்.எல்.ஏ-வைக் கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று கூறினர். எனினும், ஒரு எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டவுடன், அதுகுறித்த தகவலை சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அமைப்பின் கடமையாகும். அதன்படி, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டது குறித்த தகவல் சட்டப்பேரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சட்டப்பேரவை செயலகம் மூலம் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் தபால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 30 நாட்களுக்குள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக, முதலமைச்சருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் மற்றொரு வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link