எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்த திருமணம்; ஜோதிடர் கொடுத்த எச்சரிக்கை: ராமராஜன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்த நளினி, அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து அவர்கள் பிரிய ஜோதிடம் காரணமாக இருந்துள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

எண் கணிதத்தின் (Numerology) அடிப்படையில் பெயர்களை மாற்றுவது முதல், ஜோதிடர்களின் கணிப்புகளுக்கு ஏற்ப திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பது வரை, திரைத்துறையும் அதன் பிரபலங்களும் தங்களது மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்கள். திரையுலக நட்சத்திரங்களின் மூடநம்பிக்கைக் கதைகள் அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஒரு ஜோதிடரின் கணிப்பைத் தொடர்ந்து, மூத்த நடிகை நளினி, தனது கணவரும் நடிகருமான ராமராஜனைப் பிரிந்த கதையோடு எதையும் ஒப்பிட முடியாது; 10 ஆண்டுகளுக்கு மேலான திருமண வாழ்க்கைக்குப் பிறகு இவர்கள் பிரிந்தனர்.

தமிழ் நடன அமைப்பாளர் வைகோம் மூர்த்தி மற்றும் நடனக் கலைஞர் பிரேமா ஆகியோருக்கு எட்டு குழந்தைகள். இதில் இரண்டாவதாகப் பிறந்தவர் தான் நளினி. 7-ம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்திய அவர், கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். தனது 16வது வயதில், பி.சந்திரகுமார் இயக்கத்தில்  ‘இதிலே வந்தவர்’ என்ற மலையாள படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

ஆரம்பகால அறிமுகமும் ‘அதிர்ஷ்டமில்லாதவர்’ என்ற முத்திரையைக் கடந்ததும்

விரைவிலேயே தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். 1982-ல் வெளியான ‘இடவேளா’ திரைப்படத்தில்தான் நளினி முதன்முறையாகக் கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து கே.ஜி. ஜார்ஜ் இயக்கிய ‘லேகாயுடே மரணம் ஒரு பிளாஷ்பேக்’ (1983) மற்றும் பிரேம் நசீர் முதன்மை கேரக்டரில் நடித்த ‘ஒரு மடப்பிராவின் கதை’ (1983) ஆகிய படங்களில் நடித்தார்.

இருப்பினும், இந்தப் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை. திரைத்துறையின் அதிக மூடநம்பிக்கை கொண்ட இயல்பு காரணமாக, அவர் “அதிர்ஷ்டமில்லாதவர்” என முத்திரை குத்தப்பட்டார்; அவருக்கு வந்த வாய்ப்புகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக, டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ (1983) திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்பத்தை அளித்தது. இதன் மூலம் தென்னிந்தியா முழுவதும்  புகழ்பெற்ற நளினி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடிப்பதற்கான வழியை உருவாக்கிக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, ‘சினேகமுள்ள சிம்ஹம்’ (1986) படத்தில் மம்முட்டிக்கும், ‘பூமியிலே ராஜக்கன்மார்’ (1987) படத்தில் மோகன்லாலுக்கும் ஜோடியாக நளினி நடித்தார். மேலும் ‘ஆவநாழி’ (1986), ‘வார்த்தா’ (1986), ‘யார்’ (1985), ‘சந்தோஷக் கனவுகள்’ (1985), ‘கீதாஞ்சலி’ (1985) மற்றும் ‘டிசம்பர் பூக்கள்’ (1986) போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில், ஒரே ஆண்டில் நளினி நடித்த 24 படங்கள் வெளியாகின.

ராமராஜனுடனான திருமணம்

தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, வளர்ந்து வரும் நடிகராக இருந்த ராமராஜனுடன் நளினி வீட்டை விட்டு வெளியேறி 1987-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் காதலுக்கு நளினியின் தாயாரும் சகோதரர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு புகலிடம் அளித்துத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவாளரும், பின்னர் தமிழக முதல்வருமான நடிகை ஜே.ஜெயலலிதாவிற்கும் ராமராஜன் மீது மிகுந்த அன்பு இருந்தது. பின்னர் ஜெயலலிதாவின் அதிமுக -வில் இணைந்த ராமராஜன், மக்களவை உறுப்பினராகவும் (MP) தேர்வானார்.

நடிகை நளினி (வலது) தாயே நீயே துணை படத்தில் தனது சக நடிகை பல்லவியுடன். (எக்ஸ்பிரஸ் காப்பக புகைப்படம்)

திருமணத்திற்குப் பிறகு, நளினி சினிமாவிற்கு விடை கொடுத்தார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இருப்பினும், திருமணமான 12 ஆண்டுகளுக்குப் பிறகு நளினியும் ராமராஜனும் பிரிய முடிவெடுத்தனர். திரையுலகில் பிரிவுகளும் விவாகரத்துகளும் புதிய விஷயம் இல்லை என்றாலும், இவர்களது பிரிவு திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது; குறிப்பாக அதற்குப் பின்னணியில் இருந்த காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஜோதிடரின் ‘எச்சரிக்கை’

நளினி மற்றும் ராமராஜன் இருவருமே ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒரு ஜோதிடரின் கணிப்பே அவர்களின் பிரிவுக்குக் காரணமாக அமைந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால், ராமராஜன் அல்லது அவர்களின் குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்று அந்த ஜோதிடர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பிரிந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் கருதினர்.

அதன்படி அவர்கள் பிரிந்தனர்; அன்றிலிருந்து குழந்தைகள் நளினியுடன் வாழ்ந்து வருகின்றனர். அதன்பிறகு, நளினி மீண்டும் சினிமாவிற்குத் திரும்பி ‘ராவணபிரபு’ (2001), ‘ஜெயம்’ (2003), ‘சுக்கிரன்’ (2005), ‘தில்லாலங்கடி’ (2010), ‘சிங்கம் 3’ (2017), ‘சத்யா’ (2017), ‘அரண்மனை 3’ (2021) மற்றும் ‘யூத்’ (2026) போன்ற படங்களில் நடித்தார்.

நளினி, ராமராஜன் இருவருமே இன்றுவரை மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் பிரிந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும், அவர்கள் இன்னமும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நளினி தெரிவித்துள்ளார். “நாங்கள் பிரிந்து வாழ்ந்தாலும், நான் இன்னமும் அவரை நேசிக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

Source link