எல்-நினோவின் கோரமுகம்; ரேசன் கடைகளில் குடிநீர் விநியோகம்

எல்நினோ தொடங்கியது முதலே உலக நாடுகள் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்ற. உலகின் ஒரு பக்கம் வறட்சியும், மறுபக்கம் பெரு வெள்ளமும் என மக்களை நிலை குலையச் செய்யும் வகையில், இந்த எல்நினோ தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசியதால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனது. அதே போல, ஆசியாவின் சில நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அந்த வகையில், கொலம்பியாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் தண்ணீர் இன்றி அல்லல்பட்டு வருகின்றனர். அங்கு, கடும் வறட்சி காரணமாகக் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், ரேஷன் முறையில் வீடு வீடாகச் சென்று தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடியாக மாறியுள்ளது. எல்நினோ விளைவின் காரணமாக அந்நாட்டின் முக்கிய நீர் ஆதாரங்கள் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன.

இந்நிலையில், கொலம்பியா தலைநகர் பொகோட்டா மற்றும் மெடலின் போன்ற முக்கிய நகரங்கள் நீர் தட்டுப்பாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பொகோட்டாவில் வரலாறு காணாத வகையில் 70% நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்குச் சுழற்சி முறையில் தண்ணீர் விநியோக முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.  

அதே போல, மெடலின் நகரின் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்குச் சமமாகத் தண்ணீரைப் பகிர்ந்து வழங்க, சுழற்சி முறையிலான தண்ணீர் விநியோகம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கொலம்பிய சுற்றுச்சூழல் நிறுவனமான இடியமின் கணிப்புப்படி, இந்த ஆண்டின் எல் நினோ விளைவுகள் வரும் நவம்பர் 2026 முதல் மார்ச் 2027 வரை உச்சத்தைத் தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.   தொடர்ந்து எல்நினோ தனது கோரமுகத்தைக் காட்டி வருவதன் விளைவாக, கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் ரேசன் கடைகளில் குடிநீரை விநியோகம் செய்யும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link