சன்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற அமைப்பு) SKM (NP) சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜங்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவுடன் மத்திய மின்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் டெல்லி அருகே குர்கானில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அக்குழுவில் இடம்பெற்ற தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கி பாதயாத்திரை புறப்பட்டனர்.
பாதயாத்திரையாக புறப்பட்ட விவசாயிகள் ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனை அறிந்த மத்திய அரசு ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் மத்திய அரசின் மின்சாரத்துறை அமைச்சருமான மனோகர்லால் கட்டாரை நேரில் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது. அதனடிப்படையில் நேற்று இரவு (03.09.2026)டெல்லி அருகே குர்கானில் அமைச்சர் கட்டார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் மாலை 6 மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை இரவு 11 மணிக்கு முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து விவசாய சங்கத் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவாதம் அளித்தார். மேலும், தமிழ்நாட்டில் சூப்பர் எல்நினோ தாக்குதலால் வறட்சி தீவிரம் அடைந்து உள்ளது. காவிரி பாசன பகுதி மற்றும் முல்லைப் பெரியாறு, வைகை பாசன பகுதி வறண்டு கிடக்கிறது. நிலத்தடி நீர் பறிபோய் உள்ளது. குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட கர்நாடகா கொடுத்துள்ள விரிவான வரைவு திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தை அழிக்கும் உள் நோக்கோடு காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக, கர்நாடக விவசாயிகள் நலனுக்கு எதிரான மேகேதாட்டு வரைவு திட்ட அறிக்கை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இயங்குகிற காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் புதிய அணை கட்ட முடியாது என்பதை உறுதிப்படுத்தி வரைவுத்திட்ட அறிக்கையை நிராகரித்துள்ளது.
மேகதாட் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என எச்சரிக்கிறோம். எனவே மத்திய அரசு கர்நாடகாவிற்கு துணை போகக் கூடாது என வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தியும், ராசிமணலில் தமிழகம் அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஒத்தக்கருத்தை உருவாக்குவதற்காக வரும் செப்டம்பர் 20ஆம் தேதி காவிரி வங்க கடலில் கலக்கும் பூம்புகாரில் துவங்கி கரூர் தர்மபுரி வேலூர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் வழியாக புதுச்சேரி சென்று சுற்றுப்பயணத்தை திருவாரூரில் நிறைவு செய்ய உள்ளோம். இதுகுறித்து விரிவான கோரிக்கை மனுவையும் அமைச்சர் வசம் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கர்நாடக குஜராத் ஆந்திரா பஞ்சாப் ஹரியானா உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
