நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக் கோரியும் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய அரசு தரப்பு
விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வழக்கு தொடர்பாக விரிவானபதில்மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில்மனு தாக்கல் செய்வதற்காக ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கினார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக வேலு தரப்பு வாதம்
எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட்நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
விசாரணையை தொடர நீதிமன்றம் அனுமதி
இதையடுத்து, வழக்கு தொடர்பான புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தேவைப்படும் பட்சத்தில் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவையும் ஆகஸ்ட்14ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
லுக் அவுட் நோட்டீஸ் ரத்து
இந்த விசாரணையின் போது, எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் கீழமை நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
அறப்போர் இயக்கம் இடையீட்டு மனு
இதற்கிடையில், வழக்கை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல்செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, எ.வ.வேலு தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
