தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆக.1 முதல் முக்கிய மாற்றம்: கூட்டநெரிசலை குறைக்க ரயில்வே நடவடிக்கை

ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எளிதாகவும், கூட்ட நெரிசலின்றியும் பெறுவதற்காக இந்திய ரயில்வே புதிய ‘டோக்கன்’ முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இப்புதிய நடைமுறை வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வழக்கமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படும். பின்னர், அந்த டோக்கன் வரிசை எண்களின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் தடையின்றி முன்பதிவு செய்யப்படும். இதன் மூலம் கவுண்டரில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகளால் பயணிகள் சந்திக்கும் சிரமங்கள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின்படி, ஏசி வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும். இக்காலகட்டத்தில் டோக்கன் பெறும் பயணிகள், தங்கள் டிக்கெட்டுகளை முறையாக முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். இம்முறை நடைமுறைக்கு வந்தால், டோக்கன் பெறுவதற்கு ஒரு முறையும், டிக்கெட் பெறுவதற்கு மற்றொரு முறையும் என முன்பிருந்தது போல கவுண்டருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முன்பதிவு செயல்முறையை ஒரே கட்டத்தில் முடித்துவிட முடியும் என்பதால், இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கூட்ட நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய டோக்கன் நடைமுறையானது முதற்கட்டமாக மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் பெறச் செல்லும் பயணிகள், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையைக் (Photo ID) கட்டாயம் வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும், பயணிகளின் பெயர்கள், வயதுகள் மற்றும் பயணம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருப்பது டிக்கெட் முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்த உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link