ஏர்போர்ட்டில் நாப்கின் கிடைக்காமல் தவித்த நடிகை லதா ராவ்: சர்ச்சைக்கு பின் விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்

பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னை விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வசதி இல்லாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

‘மெட்டி ஒலி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை லதா ராவ். இவர் சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராதவிதமாகத் திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாப்கின் பெறுவதற்காகப் பெண்கள் கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு நாப்கின் வழங்கும் வெண்டிங் மெஷின் வசதி செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் உள்ள மருந்தகத்திற்குச் சென்றபோதும், அங்குப் பணியாளர்கள் யாரும் இல்லை என்பதால் அவர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் இந்த சூழல் ஏற்பட்டதால் மன உளைச்சலை சந்தித்ததாகவும், இறுதியாகப் பணியாளர் ஒருவர் வந்த பிறகே அவரிடம் நாப்கின் வாங்கிப் பயன்படுத்தியதாகவும் லதா ராவ் வேதனையுடன் பகிர்ந்தார். மேலும், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் எப்போதும் தங்களுடன் நாப்கின் எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

நடிகை லதா ராவின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை விமான நிலையத்தின் பெண்கள் ஓய்வறைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் (Vending Machines) முன்னதாகச் செயல்பாட்டில்தான் இருந்தன. ஆனால், அந்த இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகத் தொடர் புகார்கள் வந்ததன் காரணமாகவே, அந்தத் திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, ஒவ்வொரு பெண்கள் ஓய்வறையிலும் சானிட்டரி நாப்கின் அவசரத் தேவைக்குத் தொடர்பு கொள்வதற்கான உதவித் தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் விமான நிலையப் பெண் ஊழியர் நேரடியாக வந்து நாப்கினை வழங்குவார். இது தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Source link