சென்னை: ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் முன்னாள் தேசிய செயலரும், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியருமான நா.சடகோபன், 65, சென்னையில் நேற்று காலமானார்.
திருச்சியில் பிறந்த அவர், சட்டப்படிப்பை முடித்ததும், ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,யில் இணைந்து, திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரமாக பணியாற்றினார். மாநில அமைப்புச் செயலர், தேசிய செயலர் போன்ற பல பொறுப்புகளில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.
கடந்த 2005ல், ஆர்.எஸ்.எஸ்., பணிக்கு வந்த அவர், ‘விஜயபாரதம்’ வார இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் இருந்தார். சிறுநீரக பாதிப்பால் 10 ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை 8:30 மணியளவில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது, ஏ.பி.வி.பி., பணிகளுக்காக நாடு முழுதும் பயணம் செய்த அவர், மாணவர்களை ஒன்று திரட்டி, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, அனந்தகுமார், தர்மேந்திர பிரதான், உள்ளிட்டோருடன், ஏ.பி.வி.பி.,யில் இணைந்து செயல்பட்டவர்.
மறைந்த சடகோபனின் உடல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பின், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது. இன்று மாலை, ஸ்ரீரங்கத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடக்கும் என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.
