நியூயார்க்: சீர்திருத்த முன்னெடுப்புகளுக்கு மத்தியில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: வீட்டோ அதிகாரம் நடைமுறையில் இருக்கும் வரை, சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு சபையின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் இந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ்) தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஐநா பாதுகாப்பு சபையின் தற்போதைய கட்டமைப்பு 1945ம் ஆண்டின் புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்டது.
இன்றைய உலகளாவிய யதார்த்தங்களை அது பிரதிபலிக்கும் வகையில் விரிவான முறையில் மாற்றப்பட வேண்டும். ஐநா பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்கள் தொடர்பாக, புதியதாக உருவாக்கப்படும் அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
