நெருங்கும் தீபாவளி பண்டிகை; பால் பொருட்கள் விலை உயர்வு; ஆவின் நிர்வாகம் சொல்வது இதுதான்!

-நமது நிருபர்-

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆவின் நிர்வாகம் பால் பொருட்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. நாளை (அக் 28) முதல் அமலுக்கு வருகிறது.

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்து உபபொருட்களாக தயிர், நெய், பட்டர், பிஸ்கட்ஸ், பால்கோவா, குளிர்பானங்கள், முறுக்கு ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவினங்கள் அதிகரித்துள்ளதை காரணமாக விலை உயர்வை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது விலை உயர்ந்துள்ள பால் உப பொருட்களின் விபரம் பின்வருமாறு:

* 100 கிராம் ஆவின் நெய் பாட்டில் விலை ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆக அதிகரித்துள்ளது.

* ஒரு லிட்டர் ஆவின் நெய் நெய் ரூ.80 அதிகரித்து ரூ.770 ஆகவும், அரை லிட்டர் நெய் விலை ரூ.30 அதிகரித்து ரூ.390 ஆக உயர்ந்துள்ளது.

* 100 கிராம் ஆவின் வெண்ணெய் விலை ரூ.10 அதிகரித்து ரூ.70 ஆகவும், அரை கிலோ ஆவின் வெண்ணெய் விலை ரூ.45 உயர்ந்து ரூ.320 ஆனது.

* 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.5 அதிகரித்து ரூ.50 ஆகவும், 200 கி.ரசகுல்லா ரூ.90ல் இருந்து ரூ.95 ஆகவும் அதிகரித்துள்ளது.

* கால் கிலோ குலோப்ஜாமுன் விலை ரூ.15 அதிகரித்து ரூ.115 ஆகவும், கால் கிலோ பால்கோவா விலை ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.

* மைசூர்பாக் விலை கால் கிலோ ரூ.20 அதிகரித்து ரூ.160 ஆகவும், 200 மில்லி லிட்டர் ஆவின் லஸ்ஸி விலை ரூ.3 அதிகரித்து ரூ.23 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆவின் நிர்வாகம் விளக்கம்!

அதன் அறிக்கை: குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தரமான பொருட்களைத் தொடர்ந்து வழங்கவும் ஆவின் உறுதிபூண்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை தொடர்ந்து வாங்கி, கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்கும் பால் உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link