ஐ.எஸ்.எல்., கால்பந்தில் சென்னை அணி ஏமாற்றம்

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் சென்னை அணி 0–2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவிடம் தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் 13வது சீசன், நடக்கிறது. நேற்று புனேயில் நடந்த முதல் போட்டியில் இன்டர் காஷி, ஒடிஷா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் போட்டியின் 56 வது நிமிடம் இன்டர் காஷி வீரர் பிரதிக், ‘சேம் சைடு’ கோல் அடித்தார். போட்டி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் தோய் சிங் (89) ஒரு கோல் அடித்தார். முடிவில் இப்போட்டி 1–1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.

சென்னை தோல்வி

பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. 24 வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் போர்ஜா அடித்த பந்தை, சென்னை கோல் கீப்பர் முகமது நவாஸ், இடது கையால் வெளியே தள்ளி விட்டார். அங்கு வந்த மற்றொரு பெங்களூரு வீரர் ரியான் வில்லியம்ஸ், மீண்டும் பந்தை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார். முதல் பாதியில் சென்னை அணி 0–1 என பின்தங்கியது.

பெங்களூருவில் மழை பெய்த போதும் தொடர்ந்து நடந்தது. இரண்டாவது பாதியில் போர்ஜா அடித்த பந்தை, பெரோவிச் (52வது நிமிடம்) கோலாக மாற்றினார். பெங்களூரு அணி 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முடிவில் சென்னை அணி 0–2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Source link