கீவ்: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது அல்லது வாங்காமல் இருப்பது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவராது. பேச்சு வாயிலாகவே மட்டுமே போருக்கு தீர்வு காண முடியும்,” என, உக்ரைன் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஐந்தாவது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த மோதல் துவங்கிய 2022 முதல், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ‘குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான எரிசக்தியை பெறும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது’ என, மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவை சந்தித்து பேசினார்.
அதன் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்தால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்குமா’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்:
உலகளவில் எரிசக்தி நிலைமை மிகவும் கடினமாக உள்ள இந்த நேரத்தில் எங்கள் நாட்டின் 140 கோடி மக்களுக்கு தேவையான எரிசக்தியை வழங்குவது, மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஒரு நாடு எண்ணெய், அலுமினியம், கனிமங்கள், உலோகங்கள் அல்லது உரங்களை வாங்குகிறதா, இல்லையா என்பதை பொறுத்து ஐந்து ஆண்டுகளாக தொடரும் இந்த போர் முடிவுக்கு வராது.
பேச்சு வாயிலாக மட்டுமே இந்த போருக்கு தீர்வு காண முடியும். அதற்கான முயற்சிகளை இந்தியா ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
