ஒடிசா மாநிலத்தில் மீட்கப்பட்ட 5 குட்டி ஒராங்குட்டான்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவை இந்தோனேசியாவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்தோனேசிய அரசு இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, விசாரணையில் அவை தங்கள் நாட்டைச் சேர்ந்தவை என்பது உறுதியானால், அவற்றைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு 5 குட்டி ஒராங்குட்டான்கள் மீட்கப்பட்டன. தற்போது அவை புவனேஸ்வரில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தோனேசிய வனத்துறை அமைச்சகம் இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அந்த ஒராங்குட்டான்களின் இனம், உடல்நிலை, அவற்றின் பூர்வீகம் மற்றும் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான தகவல்களைக் கோரியுள்ளது.
சுமத்ராவைச் சேர்ந்தவையா?
முதற்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில், மீட்கப்பட்ட குட்டி ஒராங்குட்டான்கள் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அந்நாட்டு வனத்துறை அமைச்சகத்தின் பொது தொடர்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு இயக்குநர் ரிஸ்டியான்டோ பிரபாடி, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
”ஆனால், அவற்றின் பூர்வீகத்தை உறுதியாகக் கண்டறிய மரபணு பரிசோதனை அவசியம். இந்தியாவில் நடைபெறும் நீதிமன்ற மற்றும் சட்ட நடைமுறைகளை இந்தோனேசியா முழுமையாக மதிக்கிறது. விசாரணை முடிவடையும் வரையிலும், தேவையான நீதிமன்ற அனுமதி கிடைக்கும் வரையிலும் இரு நாடுகளின் அரசு மட்டத்திலான ஒருங்கிணைப்பு மற்றும் சிஐடிஇஎஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு தொடரும்” என்று பிரபாடி தெரிவித்துள்ளார்.
விசாரணையில் இந்த ஒராங்குட்டான்கள் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை என்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றைத் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகளை இந்தோனேசியா தயாரித்து வருவதாகத் தெரிகிறது.
இதில் ஒராங்குட்டான்களின் உடல்நிலைப் பரிசோதனை, தனிமைப்படுத்தல், மரபணு அடையாளம் காணுதல், பாதுகாப்பான போக்குவரத்து, விலங்குகளின் நலனை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறும். இந்தோனேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவற்றை உரிய முறையில் மறுவாழ்வு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.
இந்தோனேசியாவின் உயிரினங்கள் மற்றும் மரபணு வளப் பாதுகாப்பு இயக்குநரகம், இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வனத்துறை தலைமை இயக்குநரும், சிஐடிஇஎஸ் (CITES) நிர்வாக அதிகாரியுமான சுஷில் குமார் அவஸ்திக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
இந்த தகவலை அவஸ்தி ஏற்றுக்கொண்டதாகவும், முதலில் மாநில அளவிலான வனத்துறை அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக இந்தோனேசிய அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், விலங்குகளின் பாதுகாப்பு, போக்குவரத்து அல்லது வேறு நாட்டுக்கு மாற்றுவது போன்ற எந்த முடிவும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ சுஷில் குமார் அவஸ்தியைத் தொடர்புகொண்டபோதும், அவரது பதில் கிடைக்கவில்லை.
வனவிலங்கு கடத்தல் வலையமைப்பா?
5 குட்டி ஒராங்குட்டான்கள் ஒரே நேரத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் செயல்படும் வனவிலங்கு கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
“ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச வனவிலங்கு கடத்தல் வலையமைப்பு” என்ற சாத்தியத்தையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்தோனேசிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்தோனேசியாவின் வனச்சட்ட அமலாக்கத்துக்கான தலைமை இயக்குநரகமும் இந்த விவகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒராங்குட்டான்கள் எந்த வழித்தடத்தில் கடத்தப்பட்டன, அவை எங்கிருந்து புறப்பட்டன, எந்த நாட்டின் வழியாகச் சென்றன, எங்கு இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டன, அவற்றுடன் தொடர்புடைய ஆவணங்கள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை இந்தோனேசியா இந்தியாவிடம் கோரியுள்ளது.
”இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள், பணப் பரிவர்த்தனைகள், சேகரிப்பு மையங்கள் அல்லது இந்தோனேசிய எல்லைக்குள் செயல்பட்ட பிற தொடர்புகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தால், அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படப்படும்.
அதேநேரத்தில், ஆதாரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக குறிப்பிட்ட நபர்களையோ கடத்தல் வலையமைப்பையோ அடையாளம் காண்பது அவசரமான முடிவாகிவிடும்” என்றும் பிரபாடி எச்சரித்துள்ளார்.
டிஎன்ஏ பரிசோதனைதான் இறுதி முடிவைத் தரும்
உடல் அமைப்பு மற்றும் வெளிப்புறத் தோற்றம் தொடர்பான முதற்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இவை சுமத்ராவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை அவசியம்.
இந்த மரபணு ஆய்வு மூலம் ஒராங்குட்டான்களின் இனம் மட்டுமல்லாமல், அவை எந்த புவியியல் பகுதியைச் சேர்ந்தவை என்பதையும் கண்டறிய முடியும். மேலும், அவை காட்டில் இருந்து பிடிக்கப்பட்டவையா அல்லது ஏற்கெனவே மனிதர்களின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டவையா என்பதையும் ஆய்வு செய்ய முடியும்.
வனவிலங்கு கடத்தலைத் தடுக்கும் அமைப்பான வைல்ட்லைஃப் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜோஸ் லூயிஸ் கூறுகையில், “இந்த விலங்குகள் சரியாக எங்கிருந்து வந்தன என்பது தற்போது தெரியவில்லை. ஆனால், அவை இந்தோனேசியா அல்லது மலேசியாவிலிருந்து வந்திருக்கலாம். அவை எந்தப் பகுதியில் வாழும் ஒராங்குட்டான் இனத்தைச் சேர்ந்தவை என்பதை டிஎன்ஏ பரிசோதனை மட்டுமே உறுதி செய்ய முடியும்.
மேலும், சரியான நடவடிக்கையை எடுத்து, அவற்றின் சாத்தியமான பூர்வீக நாட்டுக்கே திருப்பி அனுப்புவது இந்தியாவின் தார்மீகப் பொறுப்பு” என்றும் தெரிவித்துள்ளார்.
ஒராங்குட்டான்கள் ஏன் முக்கியம்?
ஒராங்குட்டான்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளின் மழைக்காடுகளில் இயற்கையாகக் காணப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலில் அவை “மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகளின் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் சிஐடிஇஎஸ் ஒப்பந்தத்தின் முதல் இணைப்புப் பட்டியலில் ஒராங்குட்டான்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அவற்றின் சர்வதேச வர்த்தகத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
எனவே, ஒடிசாவில் மீட்கப்பட்டுள்ள இந்த 5 குட்டி ஒராங்குட்டான்களின் பூர்வீகம் குறித்த விசாரணை, அவற்றை எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முடிவை மட்டுமல்லாமல், இந்தியா–இந்தோனேசியா இடையே செயல்படக்கூடிய சர்வதேச வனவிலங்கு கடத்தல் தொடர்புகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரக்கூடியதாக உள்ளது.
