சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பி தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
தாராபுரம்: எந்தக் கட்சியின் கோட்டை? தேர்தல் வரலாறு கூறுவது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தேன். இது தொடர்பாக, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அப்போதைய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வேட்பாளர் அறிவிப்பு வெளியான உடனே பணத்தைத் திருப்பி தருவதாக அன்றைய அ.தி.மு.க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். அதன்படி, பல்வேறு வழிகளில் ரூ.4.5 கோடி பணத்தை திரட்டி, மார்ச் 11, 2026 அன்று புதுக்கோட்டையிலுள்ள சோத்துப்பாளை முருகேசன் என்ற ஒப்பந்ததாரரின் அலுவலகத்தில் அவரிடம் கொடுத்தேன்.
அதன்பின்னர், ஆலங்குடி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பணத்தை திருப்பி கேட்ட போது விஜயபாஸ்கர் ரூ. 50 லட்சத்தை மட்டுமே திருப்பிக் கொடுத்தார். பலமுறை கோரியும் மீதி பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தார் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், விஜயபாஸ்கரை 14 முறை நேரில் சந்தித்துத் தனது பணத்தைத் திரும்பக் கேட்டதாகவும், ஆனால் பணம் கிடைக்கவே இல்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
“நான் எனது பணத்தையும் ஆவணங்களையும் கேட்கும் போதெல்லாம் விஜயபாஸ்கர் மிரட்டும் தொனியில் நடந்துகொள்கிறார். அவர் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க நபர் என்பதோடு, தற்போது ஆளும் கட்சியிலும் இணைந்துள்ளார்” என்று மனுதாரர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு திங்கள்கிழமைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், இது தொடர்பாக மனுதாரர் அளித்துள்ள புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. மனுதாரரை வரும் செப்டம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
