ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார்: முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

புதுடில்லி: அனைத்து துறைகளிலும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் என்ற விதியை அமல்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், அதிகாரப்பூர்வமற்ற வாகன பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து செலவை குறைக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியநிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை ” பணியாளர் கார்களின் பயன்பாடு குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்,” என அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, மூத்த அதிகாரிகள் மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்புகள் கூடுதல் பொறுப்பு வகித்தாலும் அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசு வாகனங்களை ஒதுக்க தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக அந்த அதிகாரிக்கு தனக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

அலுவல் பணி நிமித்தம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுற்று பயணங்களை தவிர பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அல்லது பயன்படுத்தப்படாத வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதில், பாதுகாப்பாக பராமரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, நிர்வாகத் திறனை மேம்படுத்தி, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்துவதை தடுத்து அலுவல் ரீதியாக போக்குவரத்தில் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று செலவினத்துறை தெரிவித்துள்ளது.

Source link