மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு முடிவு எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

– நமது டில்லி நிருபர் –

சாமானிய மக்களின் விருப்பம் மற்றும் நலன்களை அடிப்படையாக கொண்டு கொள்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசின் செயலாளர்களுடன் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இன்று( ஜூலை 28) தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். நிதி மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில், தொழில்நுட்பம் சார்ந்த அமைச்சகங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவுறுத்தியதாவது: அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர், அதிகாரிகள் ஒருமித்த நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். நிர்வாகத்தில் முக்கிய மையமாக மக்கள் இருக்க வேண்டும். சாமானிய மக்களின் விருப்பம் மற்றும் நலன்களை அடிப்படையாக கொண்டு கொள்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்து வரும் அதே நேரத்தில் உள்நாட்டில் தனித்துவமான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியதுறைகளில் உள்நாட்டில் திறமைகளை கட்டமைக்கப்படுவதுடன், தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற வேண்டும்.

தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் குடிமக்களின் நலனில் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது. எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்.சீர்திருத்தம் என்பது பகட்டான சொல் மட்டும் அல்ல. அவை திறம்பட ஆட்சி செய்வதற்கு அவசியம்.டிஜிட்டல் அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக இணைய பாதுகாப்பிலும் வலுவான கவனம் செலுத்த வேண்டும். புதிதாக உருவாகி வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொடர்ச்சியான விழிப்புணுர்வு தேவை. இணைய பாதுகாப்பு சூழல் அமைப்பில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் அதிகப்படியான பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். இது நாடு தழுவிய இயக்கமாக பரிணமிக்க வேண்டும்.

வளர்ந்து வரும் மற்றும் எதிர்காலத் தொழில்களுக்கு தேவையான திறன்களை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில்துறையுடன் இணைந்து புதிய கல்வி பாடத்திட்டங்கள் திட்டமிடப்பட வேண்டும்.

அரசு எப்போதும் இளமை மிக்கதாகவும், ஆற்றல் மிக்கதாவும், தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும், இருப்பதுடன், புதிய சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் சுறுசுறுப்புடனும் புதுமையுடனும் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

Source link