’ஒரு அதிகாரி, ஒரு கார்’; அமலாகிறதா புதிய உத்தரவு?

அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், நிதி செலவினங்களைக் குறைக்கவும் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், செலவினத் துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு அனுப்பியுள்ளது.  

இந்த அரசாணையில், ஏற்கனவே அரசுப் பணியாளர் வாகனத்திற்கு உரிமை பெற்ற ஒரு அதிகாரிக்கு, வேறொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதற்கென வேறொரு புதிய வாகனத்தை  ஒதுக்க முடியாது. மாறாக, அந்த அதிகாரி ஏற்கனவே தமக்கு ஒதுக்கப்பட்ட பணியாளர் வாகனத்தையே தொடர்ந்து இதற்கும் பயன்படுத்த வேண்டும்.  

மேலும், அலுவலக பணி நிமித்தமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்கள் தவிர, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை, ஒன்றிய அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதற்கும் இந்த அரசாணை தடை விதித்துள்ளது. இதனூடாக ‘ஒரு அதிகாரி, ஒரு அரசு கார்’ என்ற கொள்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  

பயன்பாட்டில் இல்லாத வாகனங்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து, அரசு நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த வழிகாட்டுதல்களை அனைத்துத் துறைகளும் உடனடியாகவும் கடுமையாகவும் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   

Source link