ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழக்கம்போல், பருத்திப்பட்டு பூங்காவில் இன்று (29.07.2026) காலை ஆவடி மாநகராட்சி சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி இருந்ததைத் தூய்மைப் பணியாளர்கள் கண்டறிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், பலர் ஏற்கனவே அந்த உணவைச் சாப்பிட்டிருந்ததால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்டோர் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு, தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரின் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகளும், ஆவடி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்குத் தினமும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
