ஒரு கோடி பெண்களுக்கு ரூ.1 லட்சம்; அரசின் அதிரடி திட்டம்

உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் வேகமெடுக்கத்  தொடங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, நாடு முழுவதும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை அரசுகளும், அரசியல் கட்சிகளும் அறிவித்து வருகின்றன.  

அந்த வகையில், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, உத்தரப் பிரதேச அரசு ‘மகிளா உத்யமி கிரெடிட் யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சுமார் 1 கோடி பெண்களுக்குச் சிறு தொழில்களைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன் வழங்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கேசவ் பிரசாத் தெரிவித்துள்ளார்.   

இத்திட்டம் ‘உத்தரப் பிரதேச மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்’ கீழ் உள்ள சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்த பெண்களுக்குப் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ், கடன்கள் மூன்று கட்டங்களாக வழங்கப்படும். மொத்த நிதியுதவி ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்று அவர் கூறினார்.

இதில், முதல் கட்டமாக ரூ.20,000 கடன் வழங்கப்படும். அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பெண்கள், இரண்டாம் கட்டமாக ரூ.30,000 கடனைப் பெறத் தகுதி பெறுவார்கள். அதைத் தொடர்ந்து, இரண்டாவது தவணையைத் திருப்பிச் செலுத்திய பிறகு, அவர்களுக்கு மூன்றாவது கட்டக் கடன் ரூ.50,000 வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக, இத்திட்டத்தின் மூலம் 3 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் 1 கோடி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். விரைவில் மீதமுள்ள 2 கோடி பெண்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், “பெண்களுக்குக் கடன் வழங்குவது மட்டுமே இத்திட்டத்தின் நோக்கமல்ல. மாறாக, அவர்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களைப் பொருளாதார ரீதியாகச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். பெண்களின் வருமானம் அதிகரிப்பது குடும்பங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதோடு, கிராமங்களின் செழிப்புக்கும் அடித்தளமாக அமையும்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source link