“ஒரு பைசா கூட லஞ்சம் பெறாத நல்ல அரசாங்கம் நடைபெற்று வருகிறது” – அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார், திருநெல்வேலியில் இன்று (24.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், 1967க்குப் பிறகு கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைக்கு ஒரு கூட்டணியில் இரண்டு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். எங்களைப் (காங்கிரஸ்) பொறுத்தவரையில், எங்களுடைய தலைமையைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான அடிப்படைப் பணிகளை ஏற்கெனவே தொடங்கியுள்ளோம். 

10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு தலைவர் என்ற அடிப்படையில், மண்டல வாரியானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எங்களுடைய கட்சியைப் பலப்படுத்துவதும், வலுப்படுத்துவதும்தான் எங்களுடைய வேலை. கட்சியை வலுப்படுத்துவதன் மூலம் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவு. அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற கனவு எங்களிடம் மட்டுமல்லாமல், அடிப்படைத் தொண்டர்கள் வரையிலும் இருந்து வருகிறது. 

தற்போது எங்களுடைய முதன்மையான வேலை கட்சியை வளர்ப்பதும், வலுப்படுத்துவதும்தான். கட்சியை வலுப்படுத்தும்போது, மற்ற விஷயங்கள் தானாகவே நடைபெறும். தவெக – காங்கிரஸ் இடையே எந்தச் சலசலப்பும் கிடையாது. நாங்கள் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கிறோம். எங்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லை. நல்லாட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சம் வாங்காத, ஊழல் இல்லாத, ஒரு பைசாகூட லஞ்சமாகப் பெறாத நல்ல அரசாங்கம் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.