டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளச் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிற்கு வருகை தந்திருந்த ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ”இந்தியப் பிரதமருடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சாரம், தொழில்நுட்பம், வர்த்தகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். அவர்களால் பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேற்காசியப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த உரையின் போது இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவு, கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். கடந்த 6 மாத காலமாக புவிசார் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், சில முக்கிய நாடுகளுக்கிடையிலான உறவுகள் முறிந்துள்ளன. சில நாடுகளுக்கு இடையிலான பகைமை மறந்து, நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளன. இதனால், உலக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்படுகிறது. இந்நிலையில், தொடங்கி நடைபெற்று வரும் இந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலத்திற்குள் இந்தியப் பிரதமர் மற்றும் ஈரான் அதிபர் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
