பணியிடத்தில் ஏற்படும் பதற்றங்களைத் தவிர்க்கவும், தனிவுரிமையைப் பேணவும், திறமையான பணியாளர்களைப் போட்டி நிறுவனங்கள் ஈர்ப்பதைத் தடுக்கவும் நிறுவனங்கள் பெரும்பாலும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை ரகசியமாகவே வைப்பது வழக்கம். ஆனால் சீனாவில் உள்ள ‘டென்சென்ட்’ (Tencent) நிறுவன ஊழியர் ஒருவருக்கு, அவரது பல மில்லியன் யுவான் சம்பள விவரம் கசிந்ததால் அவரது வேலையே பறிபோயுள்ளது.
இன்னும் 1 வருஷம் தான் டைம்… மொத்த யு.எஸ்- ஸும் க்ளோஸ்; அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா?
‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ (South China Morning Post) செய்தியின்படி, ‘யே’ என்ற குடும்பப் பெயரால் மட்டுமே அறியப்படும் அந்த ஊழியரின் வருடாந்திர சம்பள விவரங்கள் ஆன்லைனில் வெளியாகி சீன சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, அவரை டென்சென்ட் நிறுவனம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
பறிப்போன வேலை
சீனாவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட, பரவலாகப் பயன்படுத்தப்படும் வீசாட் (WeChat) செயலியின் பின்னணியில் இயங்கும் டென்சென்ட் நிறுவனத்தின் வீக்சின் குரூப்பில் (Weixin Group) யே ப்ராஜெக்ட் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தார். நிறுவனத்தின் உள் தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு ஸ்கிரீன்ஷாட்டானது, யே-யின் வருடாந்திர சம்பளம் சுமார் 3.17 மில்லியன் யுவான், சுமார் ரூ. 4.5 கோடி என்பதை வெளிப்படுத்தியது.
இந்த சம்பளத் தொகுப்பில், 8,20,000 யுவானுக்கும் (சுமார் ரூ. 1.17 கோடி) அதிகமான ரொக்க போனஸ் மற்றும் 2.35 மில்லியன் யுவானுக்கும் (சுமார் ரூ. 3.35 கோடி) அதிகமான மதிப்புள்ள பங்குச் சலுகைகளும் அடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் ஆன்லைனில் விரைவாக பேசுபொருளாக மாறியது. பல பயனர்கள், நிர்வாகிகளின் அதிகபட்ச சம்பளம், ஊழியர்களின் தனி உரிமை மற்றும் நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் எப்படிப் பொதுவெளியில் வெளியானது என்பது குறித்து விவாதிக்கத் தொடங்கினர்.
ரகசியத் தகவல்களை வெளியிட்டதால் பணிநீக்கம்
டென்சென்ட் நிறுவனத்தின் சுற்றறிக்கையின்படி, முக்கியமான பெருநிறுவனத் தகவல்களை வெளி நபர்களிடம் பகிர்ந்ததற்காக யே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த கசிவு டென்சென்ட் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் யே, டென்சென்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களுடன் முறையான ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பை நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதிமுறைகளைக் கடுமையாக்கும் டென்சென்ட்
சமீப ஆண்டுகளில் டென்சென்ட் நிறுவனம் தனது நிறுவனத்தின் உள் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், ஜனவரி மாதம் வெளியிட்ட தனது வருடாந்திர பெருநிறுவன அறிக்கையில், 2025-ஆம் ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட விதிமீறல்களைத் தங்களது ஊழல் தடுப்புக் குழு கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த விசாரணைகளின் விளைவாக 90-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் குற்றவியல் நடவடிக்கைக்காக சட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
டென்சென்ட் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, ஊழியர்கள் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்கள், உள்ளகத் தொடர்புகள் வெளியிடப்படாத சோர்ஸ் கோடுகள் (source code) மற்றும் ஊழியர்களின் பதிவேடுகள் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
