தமிழ் சினிமாவில், நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராக மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்து வரும் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் 3 படங்களை வைத்து ரிலீஸ்க்கு முன்பே ரூ350 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமையாளராக வலம் வருபவர் கமல்ஹாசன். மேலும் தமிழ் சினிமாவில் பல புதுமையான டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைத்த இவர், தற்போது நடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்து வருகிறார். தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கடைசியாக தக் லைப் படத்தை தயாரித்த கமல்ஹாசன் தற்போது 3 படங்களை தயாரித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கததில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் தற்போது தாய் கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தை தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படத்தை தயாரித்து வரும் ராஜ்கமல் நிறுவனம், கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தையும் தயாரிக்க உள்ளது.
விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்திற்கு சண்டியர் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 படங்களில் ஓ.டி.டி உரிமை வியாபாரம் முடிந்துவிட்டதாகவும், ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படம் ரூ150 கோடிக்கும், கமல்ஹாசனின் சண்டியர் திரைப்படம் ரூ125 கோடிக்கும், சிவகார்த்திகேயனின் சேயோன் திரைபபடம் ரூ75 கோடிக்கும் வியாபாரம் ஆகியுள்ளதாகவும், இந்த திரைப்படங்களை ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மூன்று படங்களின் உரிமைகள் தொடர்பாக ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.350 கோடி வர்த்தகம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணஒி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்களின் ஓ.டி.டி உரிமைகள் ரிலீஸ்க்கு முன்பே விற்பனை ஆகிவிடும். அந்த வகையில் தற்போது இந்த 3 திரைப்படங்களின் ஓ.டி.டி உரிமைகள் குறித்த வியாபார மதிப்பு தமிழ் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது,
அதே சமயம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும், இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
