தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கூட்டணி முறிந்தாலும், சென்னையில் ஒரே மேடையில் தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் பங்கேற்ர நிலைய்ல், தமிழ்நாட்டின் உரிமைக்காக இரு இயக்கங்களும் என்றும் ஓரணியில் நிற்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து பேசிய, உதயநிதி ஸ்டாலின், “களத்தில் போராடும் தலைவர்களை விட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்பவர்களையே சமூகம் அதிகம் கொண்டாடுகிறது” என ஆதங்கம் தெரிவித்தார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்வில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மார்பளவு திருவுருவச் சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் “அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர்” என்ற நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தோழர் நல்லகண்ணுவின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் நல்லகண்ணுவுக்கு சிலை அமைத்ததன் மூலம் யாரை நாம் கொண்டாட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது. மக்களுக்கான களப் போராளிகளை கொண்டாடுவதை விட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பவர்களை சமூகம் அதிகம் கொண்டாடுகிறது.
மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இன்று நடைபெற்ற விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த திரு.ஆர்.நல்லகண்ணு அவர்களின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்கள்.
மேலும், இந்நிகழ்வின் போது திணைநிலவாசிகள்… pic.twitter.com/c02jzwA1By
— Office of Udhayanidhi Stalin (@Office_of_Udhay) July 29, 2026
“தமிழர் உரிமை, தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றென்றைக்கும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும். கலைஞர் கருணாநிதி, ‘நான் மட்டும் தந்தை பெரியாரை சந்திக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்திருப்பேன் என்று அடிக்கடி பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் மேல் கலைஞர் கருணாநிதிக்கு தனி பாசம் உண்டும்.
இன்னும் ஒரு சின்ன நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டது. வெறும் 1% வாக்கு வித்தியாசத்தில் அன்றைக்கு அ.தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. அப்போது பத்திரிகையாளர்கள் எல்லாம் சென்று கலைஞர் கருணாநிதியைப் பார்க்கும்போது, அவருக்கு தி.மு.க ஆட்சிகு வரவில்லை என்பதில் எந்த வருத்தமும் இல்லை.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத ஒரு சட்டசபை அமைந்திருக்கிறது. அதில் எனக்கு வருத்தம் என்று கருணாநிதி பேசினார். அந்த அளவுக்கு, கலைஞர் கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது ஒரு தனி பாசம் இருந்தது. கருணாநிதி வழியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தனிப் பாசம் கொண்டுள்ளார்.
நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. நீட் நுழைவுத் தேர்வு என்று வந்ததோ அன்றிலிருந்தே தி.மு.க எதிர்த்து வருகிறது. 2021 தி.மு.க ஆட்சி அமைந்ததும் நீட் பாதிப்பை கண்டறிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு வேண்டி தி.மு.க அரசு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை கொண்டு வந்தோம்.
அதற்கு கவர்னர் ஒப்புதல் தராத நிலையில், இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியது தி.மு.க தான். நீட் தேர்வு போராட்டம் முடிந்துவிட்டதாக கருதவில்லை. இப்போதுதான் இன்னும் வீரியமாக ஆரம்பித்துள்ளது. நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாகத் தான் இந்தப் போராட்டம் உள்ளது.” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க கூட்டணி முறிந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஒரே மேடையில் தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், திராவிடக் கழகத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இடையே நெருங்கிய கொள்கை உறவு இருப்பதாக தெரிவித்தார். பெரியார், கலைஞர், ஸ்டாலின் ஆகியோரை எப்படி கடந்து செல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தங்களின் முதன்மை எதிரி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-தான் என்றும், அவர்களைச் சமரசமின்றி எதிர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், அரசியலில் ஏற்ற இறக்கங்களும் நிலைப்பாடு மாற்றங்களும் வரலாம் என்றாலும், ஜனநாயகப் போரில் இணைந்து செயல்பட எப்போதும் தயாராக இருப்பதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
