ரசிகர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம்; அல்லு அர்ஜூன் அறிவிப்பு!

அல்லு அர்ஜூன் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ராக்கா’படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டுக்கான தனது ரசிகர் மன்ற சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஹைதராபாத்தில் நடந்த இந்த சந்திப்பில் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இதில் சிறப்பம்சமாக உறுப்பினர்களுக்கு காப்பீடு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இந்த காப்பீடு மூலம் எதாவது விபத்து ஏற்பட்டால் மாநிலக் குழு உறுப்பினர்கள் ரூ.5 லட்சம் வரையிலும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரூ.3 லட்சம் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதையடுத்து நிகழ்வில் பேசிய அவர், “ஒவ்வொரு மனிதரிடமும் குறிப்பிட்ட அளவு நேரமும் ஆற்றலும் மட்டுமே இருக்கிறது. உங்களை ஒரு பேட்டரியாக நினைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் நீங்கள் 100 சதவீத ஆற்றலுடன் எழுகிறீர்கள், ஆனால் நாள் செல்லச் செல்ல அந்த ஆற்றல் குறையத் தொடங்குகிறது. அந்த 100 சதவீதத்தை உங்கள் நேரம், ஆற்றல், மதிப்பெண்கள் அல்லது பணம் என எதோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கேள்வி என்னவென்றால், அதை எதில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதுதான். 

ஒருவரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலோ, ட்ரோல் செய்வதிலோ அல்லது அவர்களைப் பற்றிப் பேசுவதிலோ உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்திற்காக உங்கள் ஆற்றலில் ஒரு சதவீதத்தைக் கூட செலவிடாதீர்கள். உங்களிடம் 100 ரூபாய் இருந்தால், உங்களுக்குத் தேவையில்லாத ஒரு விஷயத்திற்காக அதைச் செலவிடுவீர்களா? மாட்டீர்கள் அல்லவா? அதுபோல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராத விஷயங்களுக்காக ஏன் உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டும்?

அதற்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் அந்த ஆற்றலைச் செலவிடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களைச் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் விரும்பும் ஒருவரின் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வேண்டியிருந்தாலும் கூட, குறைந்தபட்சம் உங்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்திற்காகத்தான் உங்கள் ஆற்றலைச் செலவிடுகிறீர்கள்” என்றார். 

Source link