“ஓடுகாலி நாய்களை ஓட ஓட விரட்டுவோம்”

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

குறிப்பாக திமுக தலவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது,  மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று (12-09-26) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அன்று ஆளுநரை ஓடவிட்டார். இன்று ஓடு ஓடு என்று மேடையில் ஓடி ஓடி காட்டி கொண்டிருந்த ஓடுகாலி முதலமைச்சர் விஜய்யை, அவரின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஓடவிட்டார். ஓடும்போது திங்கட்கிழமை பதில் சொல்ல வருவேன், யாரையும் ஓடவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று புறமுதுகிட்டு ஓடினார். ஒரு மணி நேரம் சினிமா பாணியில் வசனத்தை பேசினார். அந்த ஒரு மணி நேரமும் எதிர்த்து நின்று பேசுவதற்கு வாய்ப்பை கேட்டோம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?. எங்கள் அண்ணன் உதயநிதி கேள்விகளுக்கு பதில் சொல்ல தெம்பற்ற, திராணியற்ற, தைரியமற்ற முதலமைச்சர், எங்கள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசி முடித்தார். வாய்ப்பு கொடுத்திருந்தால் தெரியும்.

சட்டமன்றத்தில் ஆணி அடித்தார் போல் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியற்றுதான் அன்றைக்கு எங்கள் எதிர்கட்சி தலைவருக்கு ஒலிபெருக்கியே தரவில்லை. ஓடுகிற கூட்டம் என்று எங்களை சொல்லுகிறீர்களே, யார் ஓடுகிற கூட்டம்? தலைவா என்ற ஒரு படத்திற்காக கொடநாட்டில் ஓடிப்போய் நின்ற தலைவன் யார்? எமர்ஜென்சி அறிவித்தவுடன் கைது படலம் ஆரம்பமாகிறது. காவல் துறையை அழைத்து சிரித்த முகத்தோடு சிறைக்கு அனுப்பிய சிங்க கூட்டத்தின் தலைவர் எங்கள் தலைவர். அவர்கள் உன்னைப்போல் கரூரில் 41 உயிர்கள் பலி கொண்டவுடன் விமான நிலையத்தில் ஓடு ஓடு ஓடு என்று ஓடிய தலைவன் அல்ல. டவுசர் பார்ட்டி நிர்மல்குமார் ஓடி ஒழிந்து முன் ஜாமீன் பெற்ற கோழை எங்களை பார்த்து மிசாவில் பயந்தவர் என்று எப்படி சொல்ல முடியும்? எங்கள் இளைஞரோடு மிசா குறித்து வாதம் செய்வதற்கு நீ தயாரா? கோழையற்ற, திறனற்ற, தெம்பற்ற ஓடுகாலி நாயே… உனக்கு சட்டமன்றம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டாம்.

அடிபட்ட புலியாக திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு களத்தில் நின்று கொண்டிருக்கின்றது. நிச்சயம் ஒரு நாள், வட்டியும் முதலுமாக சேர்த்து ஓடுகாலி நாய்களுக்கு ஒப்படைப்போம். ஓடுகாலி நாய்களை இந்த நாட்டை விட்டு ஓட ஓட விரட்டுவோம். இன்றைக்கு எங்கள் உணர்வில் நீ தொட்டு பார்த்திருக்கின்றாய். நாங்கள் வீண் சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை” என்று ஆவேசமாகப் பேசினார். 

Source link