நவசாரி: ஓட்டுகளையும் அதிகாரத்தையும் விட மக்கள் சேவையே சக்தி வாய்ந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி நவசாரி மாவட்டத்தில் பாஜவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:அதிகாரத்தில் இருந்த பெருமையை விட, மக்களுக்கு பாஜ தொண்டர்கள் ஆற்றிய சேவை காரணமாகவே இங்கு பாஜ வலுவாக உள்ளது.இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இவ்வளவு அன்புக்குப் பிறகும், பாஜவினர் சேவைப் பாதையை உறுதியாகப் பற்றிக்கொண்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, ‘ஓய்வு தடைசெய்யப்பட்டுள்ளது’ என்பது வெறும் முழக்கம் அல்ல. பாஜ தொண்டர்கள் ஒவ்வொருவரும் பொதுச் சேவைக்காக இரவும் பகலும் அயராது உழைத்து, தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.
சாதாரண மக்களின் சக்தியால் வரும் மாற்றம் நிரந்தரமானது; அந்த மாற்றம் புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. நவசாரி மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் தேர்தலில் கிடைக்கும் ஆதரவை விட மதிப்பு மிக்கவை. அவை மக்களின் நம்பிக்கையை பெற்றுத் தரும்.
இம்மாவட்டத்தை காசநோய் இல்லாததாக மாற்றுவதற்கு பாஜ தொண்டர்கள் உறுதிபூண்டுள்ளனர். அதன் வாயிலாக, வரும் தலைமுறையினரின் நலனுக்காக அவர்கள் பாடுபடுகின்றனர். அதிகாரம், அமைப்பு ரீதியான பதவிகள், கவுரவம் மற்றும் அமைப்புகள் அனைத்தும் மக்களுக்குச் சேவை செய்யும் உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும்.
அதிகாரமும் சேவைக்கே, அமைப்பும் சேவைக்கே, பதவியும் சேவைக்கே, கவுரவமும் சேவைக்கே, அமைப்பும் சேவைக்கே. ஓட்டுகளையும் அதிகாரத்தையும் விட மக்கள் சேவையே சக்தி வாய்ந்தது.. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
