சென்னையில் உள்ள ஈ.சி.ஆர் (ECR) மற்றும் ஓ.எம்.ஆர் (OMR) பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலையை அமைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் ஈ.சி.ஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவை கிட்டத்தட்ட இணையான சாலைகளாக உள்ளன. ஈ.சி.ஆர் சாலை புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கான முக்கிய சாலையாக உள்ளது. அதேநேரம் ஓ.எம்.ஆர் சாலையில் ஐ.டி நிறுவனங்கள் வரிசையாக உள்ளன. இந்த இரண்டு சாலைகளும் நாள்தோறும் பரபரப்பாக இயங்கும் சாலைகளாகும். குறிப்பாக ஓ.எம்.ஆர் சாலை போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. இதன் தாக்கம் ஈ.சி.ஆர் போக்குவரத்தையும் பாதிக்கிறது.
இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் சோழிங்கநல்லூரில் ஒரு இணைப்புச் சாலை உள்ளது. மற்றபடி சரியான இணைப்பு சாலைகள் இல்லை. துரைப்பாக்கம், நீலாங்கரை சாலை வழியாக தான் செல்ல வேண்டும். எனவே ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளை இணைக்கும் வகையில் சாலை ஒன்றை கட்டமைக்க கடந்த பல ஆண்டுகளாகவே ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியுள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் கோவளத்திற்கு இடையே பழைய மகாபலிபுரம் சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கைக்காக, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ரூ. 14.20 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்கள் நீடிக்கும் இந்த ஆய்வில், நில அளவீடுகள், போக்குவரத்துப் பகுப்பாய்வு, மண் பரிசோதனை மற்றும் செலவு மதிப்பீடுகள் ஆகியவை அடங்கும். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் நவம்பர் 2, 2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கடந்த கால முன்மொழிவுகள் நிலப் பிரச்சினைகள் காரணமாகத் தடைபட்ட போதிலும், இது சோழிங்கநல்லூர் போன்ற சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தையும் குறைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர். இது, மேம்பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கங்கள் உள்ளிட்ட சென்னையின் பரந்த உள்கட்டமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகிறது.
மேலும், புதிய இணைப்பு சாலை வரும் போது போக்குவரத்துக்கான நேரம் பெரிதும் குறையும். மேலும், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், நாவலூர் பகுதிகளில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சீரான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
