கடந்த ஆண்டு தெரிவித்த கருத்தின் எதிரொலி; மன்னிப்பு கேட்ட பிரபல பாடகர்!

இந்தி மற்றும் கன்னடத் திரையுலகில் பிராதனமாக பாடல் பாடி பிரபலமடைந்தவர் சோனு நிகம். இதைத்தவிர்த்து தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி உள்ளிட இன்னும் பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் ‘வாராயோ தோழி(ஜீன்ஸ்)’, ‘விழியில் உன் விழியில்(கிரீடம்)’, ‘மனசெல்லாம் மழையே(சகுனி)’ உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாடல்கள் அடங்கும். 
 
பாடுவதைத் தாண்டி பல்வேறு ஊர்களில் இசைக் கசேரியும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ‘தி ரெவல்யூஷன் இந்தியா டூர்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன் முதல் கச்சேரியாக பெங்களூருவில் வரும் அக்டோபர் 24 தேதி ஆரம்பிக்கவுள்ளது. அதற்காக அவர் தயாராகி வந்தார். ஆனால் அந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் டி.ஏ. நாராயண கௌடா, பெங்களூரு காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளார். அதில் அனுமதி கொடுத்தால் போராட்டம் வெடிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த எதிர்புக்கு காரணம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு இசை நிகழ்ச்சியின் போது, ​​கன்னடப் பாடல்களைப் பாடுமாறு பார்வையாளர் ஒருவர் கோரியதை, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததே இதற்குக் காரணம். 

அந்நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் சோனு நிகமிடம் கன்னடப் பாடல்களைப் பாடுமாறு கேட்டார். அதற்குப் பதிலளித்த சோனு நிகம், தான் தனது மிகச்சிறந்த பாடல்களில் சிலவற்றை கன்னடத்தில் பாடியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், அந்த நபர் மீண்டும் மீண்டும் தனது கோரிக்கையை வைத்தார். அப்போது சற்று கோவமடைந்த சோனு நிகம்,  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை உதாரணமாகக் குறிப்பிட்டு, “இதன் காரணமாகத்தான் பஹல்காம் தாக்குதல் நடந்தது” என்று கூறினார். இந்தக் கருத்து கர்நாடகா மக்களிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. 

 இந்த சம்பவம் தற்போது நாராயண கௌடா மனு கொடுத்ததற்கு பிறகு மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது. இதனால் சோனு நிகம் தற்போது கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “எனது அன்புக்குரிய கன்னட மக்களே. உண்மை என்னவென்பது எனக்கும், இறைவனுக்கும், அன்று அந்த இசை நிகழ்ச்சியில் இருந்த பார்வையாளர்களுக்கும் தெரியும். இருப்பினும், நாராயண கௌடாவுடன் நான் பேசினேன். அவர் ஒரு அற்புதமான மனிதர், எங்களுக்கிடையிலான உரையாடல் மிகவும் அன்பானதாகவும், மரியாதைக்குரியதாகவும் இருந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 

ஒருவரை நாம் நேசிக்கும்போது, ​​அந்த உறவு நீடிக்க வேண்டும் என்று விரும்பும்போது, ​​ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பதில் எந்தத் தயக்கமும் இருக்காது. எனவே, என் அன்புக்குரியவர்களே, நான் அறியாமல் ஏதேனும் பேசி உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும், குறிப்பாக கர்நாடகாவில் உள்ள என் குடும்பம் போன்ற மக்களை, ஒருபோதும் புண்படுத்தும் நபர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த 30 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளப்பரிய அன்பையும் மரியாதையையும் கொடுத்துள்ளீர்கள். எனவே, ஒரு சிறிய தவறான புரிதலால் அந்த உறவில் கசப்போ, விரிசலோ ஏற்பட நான் விரும்பவில்லை” என்றிருந்தார். இதையடுத்து மனு கொடுத்த நாராயண கௌடா, தங்கள் அமைப்புக்கு எப்போதும் சோனுவின் பாடல்கள் பிடிக்கும் என்றும், அவர் மீது எந்தத் தனிப்பட்ட வெறுப்பும் இல்லை என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது போராட்ட அறிவிப்பை பின்வாங்குவதாக அறிவித்தார்.