கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைவு; தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மலைப்பகுதிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ கனிமொழி, பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்டனர்.

அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள், கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உடனிருந்தார். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், தேவையற்ற பொருட்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்குவதைத் தவிர்த்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்தை அணுகி உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டெங்கு தடுப்பில் அரசின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெங்கு பாதிப்பைத் தடுப்போம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ராஜ், கோவையில் டெங்கு பாதிப்பு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 450 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வருவதாகவும், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கோவையில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் டெங்கு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மணி பிளான்ட், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறதா என்பதை பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்து, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளுக்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது பொதுமக்கள் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் புற்றுநோய் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் ஒரு மையமும், ஐந்து மண்டலங்களில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும், அவற்றில் கோவையும் ஒன்றாக இருப்பதாகவும் அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.

கோவையில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த செவிலியர் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். கோவை அரசு மருத்துவமனையில் ரூ.4.5 கோடி செலவில் இதய நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மருத்துவத்துறை சார்பில் கோவைக்கு மட்டும் ரூ.1,111 கோடி அளவிலான தனித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக கோவைக்கான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.தமிழகத்தில் செவிலியர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 7,704 செவிலியர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

செவிலியர்கள் தேவைப்படும் இடங்களில் அவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதிப்பெண் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். மேலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அந்தப் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண் ராஜ், தலைமைச் செயலகம் தொடர்பாக முதலமைச்சரின் அறிக்கையில் தேவையான விளக்கங்கள் தெளிவாக இடம்பெற்றுள்ளதாக கூறினார். இது ஐந்து ஆண்டுகளுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல என்றும், எதிர்கால தலைமுறைகளின் தேவையை கருத்தில் கொண்டே திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் ஒரு அமைப்பாக இருப்பதுடன், அதை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் அருண் ராஜ் கூறினார். நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பி. ரஹ்மான். கோவை மாவட்டம்.

Source link