பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் 20’ நிகழ்ச்சியில் ராப்பர் பாட்ஷாவின் முன்னாள் மனைவி இஷா ரிக்கி, போட்டியாளராக களமிறங்கியுள்ளார். திருமணமான வெறும் ஐந்து மாதங்களிலேயே பாட்ஷாவுடனான விவாகரத்தை அறிவித்ததன் மூலம் இஷா சமீபத்தில் செய்திகளில் இடம்பிடித்திருந்தார்.
‘பிக்பாஸ் 20’ நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில், காதலில் தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டேன் என்பதைப் பற்றி தனது அறிமுக வீடியோவில் பேசியபோது இஷா உணர்ச்சிவசப்பட்டார். அவரது வீடியோவைப் பார்த்த சல்மான் கான், கடந்த காலத்தை விட்டுவிட்டு வாழ்க்கையில் இருக்கும் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி முன்னேறுமாறு அவருக்கு அறிவுரை வழங்கினார்.
தனது அறிமுக வீடியோவில் இஷா ரிக்கி கூறுகையில், “நான் ஒரு மாடலாக எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். பஞ்சாபி திரைப்படங்களிலும், ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளேன். அதுதான் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த காலகட்டமாக இருந்தது. அதன்பிறகுதான் நான் காதலில் விழுந்தேன். நான் எதிர்பார்த்த பாதுகாப்பான இடம் அவர்தான் என்று நினைத்தேன். திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதற்காக நிறைய முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால் சில அனுபவங்கள் ஒருவரை முற்றிலும் மாற்றிவிடும். நம்பிக்கை உடைந்துவிட்டால், ‘நான் எங்கே தவறு செய்தேன்?’ என்று நம்மையே கேட்கும் நிலைக்கு நாம் வந்துவிடுகிறோம். நான் எதிர்கொண்ட அனைத்தும் என்னை உடைத்துவிட்டன. அதனால்தான் அதைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. எனது சொந்த வாழ்க்கையிலே நான் ஒரு பக்க கதாபாத்திரமாக மாறிவிட்டதை நான் உணரவில்லை. ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
அந்த நிழலில் இருந்து வெளியேறி, மக்கள் என்னை என்னவாக இருக்கிறேனோ அதற்காக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
பின்னர் இஷா ரிக்கி மேடைக்கு வந்தபோது சல்மான் கான் கூறுகையில், “எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரிவுகள், காதல் தோல்விகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் நீங்கள் இப்போது யாருக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். கடந்த காலத்தை நினைத்து இன்னும் அழுதுகொண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி இதுவரை அறியாதவர்களிடம் அதைப் பற்றி சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு இஷா, “இல்லை சார். அதெல்லாம் எனது கடந்த காலம். இன்று மக்கள் என்னை எந்த விஷயத்தின் அடிப்படையில் அடையாளம் காண்கிறார்களோ, அதைவிட நான் மிகப் பெரியவள் என்பதை உலகிற்கு காட்ட விரும்புகிறேன்,” என்று பதிலளித்தார். அதற்கு சல்மான் கான், “இன்று மக்கள் உங்களை அடையாளம் காணும் அந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் அதிகம் பேசாமல் இருப்பதும், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இருப்பதும் மிகவும் நல்லது. நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும்.
என்ன நடந்தது, ஏன் நடந்தது, யார் தவறு செய்தார்கள் என்பதையெல்லாம் யாரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்தக் காலம் முடிந்துவிட்டது. இஷா, நீங்கள் முன்னோக்கிச் செல்லுங்கள். ஏனென்றால், மற்றவர் ஏற்கனவே எப்போதோ தனது வாழ்க்கையில் முன்னேறிச் சென்றுவிட்டார். உங்களை உணர்வுபூர்வமாக பலவீனப்படுத்தியதற்கான பெருமையை யாருக்கும் கொடுக்காதீர்கள். உங்கள் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்துங்கள்,” என்று அறிவுரை வழங்கினார்.
‘பிக்பாஸ் 20’ நிகழ்ச்சியில் இணைவதற்கு முன்பு ‘ஸ்க்ரீன்’க்கு அளித்த பேட்டியில், தனது குணாதிசயங்கள் குறித்தும் பேசிய இஷா இந்த நிகழ்ச்சியில் எனது பல்வேறு பக்கங்களை நீங்கள் பார்க்க முடியும். அன்பான மனமும், வலுவான சிந்தனையும் கொண்டவள் நான். என்னை யாராலும் அவ்வளவு எளிதில் உடைத்துவிட முடியாது. அவர்கள் என்னை அழ வைக்கலாம். ஆனால் தோல்வியடைந்து பின்வாங்கும் நிலைக்கு என்னை ஒருபோதும் தள்ள முடியாது.
#SalmanKhan gave advice to #IshaRikhi
‘Move On’ because other party (Badshah) moved on long time ago so there’s nobody should get the credit of hurting you emotionally #BiggBoss20pic.twitter.com/RcIjFKtYqd
— Devil V!SHAL (@VishalRC007) September 6, 2026
நான் எளிதில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். மக்களுக்கு எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகளை வழங்கும் நபர் நான். ஆனால் ஒரு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதன்பிறகு அது முடிந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் யாருடனாவது நீண்ட காலம் ஒன்றாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, அவற்றைத் தீர்த்துவிட்டு தெளிவான மனதுடன் முன்னேற முயற்சிப்பேன்.
எனது மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசும் குணம் எனக்கு உண்டு. அதனால் எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டேன். என் தரப்பில் தவறு இருந்தால், மன்னிப்பு கேட்கவும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று கூறியிருந்தார்.
