சென்னை: ”தினமலர் நாளிதழ், கட்சிகளை கடந்து மக்களுக்காக நிற்கிறது,” என, த.வெ.க., முதன்மை செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பேசினார்.
‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பில், வைகைச்செல்வன் பேசிய தாவது:
தினமலர் நாளிதழோடு எனக்கு இருந்த பந்தம், சின்ன வயதில் தொடங்கியது. என்னுடைய தாத்தா, எனக்கு தினமலர் வாங்கி தருவார். என்னுடைய பேச்சாற்றல் வளர்ந்ததற்கு, அதுவும் ஒரு காரணம்.
‘தினமலர்’ என்னுடைய ஊனில், உணர்வில், உதிரத்தில், நாடி, நரம்புகளில் கலந்து விட்டது. ஒரு அரசியல்வாதி, மக்களை சந்தித்து, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நம்பிக்கை கோருகிறான். ஆனால், நாளிதழ் என்பது, ஒவ்வொரு நாளும் மக்களிடையே நம்பிக்கை கோர வேண்டும்.
அந்த வகையில், தினமலர் நாளிதழும், மக்களிடையே நம்பிக்கை கோருகிறது; மக்களுக்காக நிற்கிறது. டீக்கடை பெஞ்ச் பகுதியை பார்க்காமல், எங்களுக்கு துாக்கமே வராது. ஏனென்றால், என்னுடன் வருபவர்களே செய்தி தந்திருப்பர். தினமலர் நாளிதழில், அரசியல் சொல்லும் செய்தி, ஒரு தனித்துவமான பார்வை கொண்டது.
பத்திரிகை துறையில், 75 ஆண்டு காலம் பாரம்பரியம் என்பது, சாதாரண விஷயம் கிடையாது. கட்சி என்பதை கடந்து, ஒரு சமூகத்தோடு மலர்கின்ற ஒரு மலராக தினமலர் இருக்கிறது. ஒரு சாதாரண மனிதனின் பிரச்னையை பற்றி தினமலர் பேசுகிறது.
ஏதோ ஒரு ஊரில் சாலை சரியில்லை என்றாலும், ‘தினமலர்’ எழுதுகிறது. நான் அமைச்சராக இருந்தபோது, தினமலர் ஒரு செய்தியை வெளியிட்டது. அன்று, நான் முதல்வரிடம் வாங்கிய திட்டுக்கு அளவே இல்லை. ‘நிகழ்ச்சிக்கு ஏன் தாமதமாக சென்றாய்?’ என, வாட்டி வதைத்து விட்டார். அதற்கான முழு பொறுப்பு தினமலர் நாளிதழுக்கு தான்.
புலவர்கள் தான், மன்னர்களை நேர்வழி செலுத்துவர். அதேபோல, ஒரு அரசை நேர்வழிக்கு கொண்டு செல்லும் தார்மீக கடமையான தலையாய பணியை தினமலர் செய்கிறது. தினமலர் நாளிதழின் தலைப்புகள் வித்தியாசமாக இருக்கும்.
ஒரு பத்திரிகை, 75 ஆண்டுகள், அதன் இடத்தை தக்க வைத்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு இடத்தை அடைந்து விடலாம்; ஆனால், அதை தக்க வைப்பது கடினம். ஆனால் தினமலர், தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஒரு நல்ல நாளிதழ், ஒரு கட்சிக்காக மட்டுமே வாழ முடியாது; ஒரு சமூகத்திற்காக வாழ வேண்டும். மக்களின் பக்கம் நிற்பதால் தான், தினமலர் 75 ஆண்டுகள் நிற்கிறது. அரசியல் மாறி விட்டது, தலைமுறை மாறி விட்டது. ஆனால், இன்றும் ‘தினமலர்’ மாறாமல் பயணிக்கிறது. உண்மை இருப்பதால், தினமலர் அப்படியே நிற்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
