கன்னியாகுமரி எஸ்.பி பற்றி விமர்சனம்: சவுக்கு சங்கர் மீது 4 காவல் நிலையங்களில் புகார்

சவுக்கு யூடியூப் சேனலை நடத்தி வருபவர் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியான இவர், பல முக்கிய தகவல்களை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். அதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். மேலும், அவரது கருத்துக்காக சிறை சென்றதும் உண்டு. குறிப்பாக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த வழக்குகளில் அவர் சிறை சென்று வந்துள்ளார். 

தவிர, சவுக்கு சங்கர் கூறும் தகவல் தவறானது என்றும், அவர் பணம் வாங்கிவிட்டு தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார் என்றும் அவர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனாலும், அவர் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதனை ஏராளமானோர் பார்த்தும் வருகிறார்கள். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) டாக்டர் ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்து தொடர்பாக சவுக்கு சங்கர் மீது 4 காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சவுக்கு சங்கர் கனிம வள சுரண்டல் மாஃபியா கும்பலிடம் இருந்து பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) டாக்டர் ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார் என்றும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருவதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி நான்கு காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட நிருபர் ஷைஜீ தலைமையிலான குழுவினர் நேசமணி நகர் காவல் நிலையத்திலும், நாஞ்சில் குரல் பத்திரிகை ஆசிரியர் ரெகு தலைமையிலான குழுவினர் கோட்டார் காவல் நிலையத்திலும், நிருபர் இசைமணி தலைமையிலான குழுவினர் வடசேரி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி-யிடமும், நிருபர் பிரேம் தலைமையில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திலும் புகார் மனுவை அளித்துள்ளார்கள். 

Source link