புதுடில்லி: சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹவுதி பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், சவுதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி மற்றும் எண்ணெய் ஆலைகள் பற்றி எரிந்தன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான போர், மேற்காசியா முழுவதும் விரிவடைந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கை; சவுதி அரேபியா மீதான தாக்குதல்களையும், குறிப்பாக மக்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்களையும் கண்டிக்கிறோம்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
