கரப்பான் கும்பலின் பித்தலாட்டம்: போலி ஜாமின்தாரர்களை விசாரணையில் கண்டுபிடித்த நீதிபதி

வழக்கு விசாரணையின் போது, கரப்பான் கும்பல் போலியான ஜாமின்தாரர்களை ஆஜர்படுத்தியதை டில்லி சிறப்பு நீதிமன்றம் கண்டுபிடித்து, கடுமையாக கண்டித்துள்ளது.

தலைநகர் டில்லியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் அமைதியை குலைக்கும் வகையில் கரப்பான் கும்பலின் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் நீதிமன்றக் காவல் முடிந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரின் காவலையும் அக். 21ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின் போது இவர்களுக்கு ஆதரவாக புதிய ஜாமின்தாரர்கள் ஆஜராகினர். இதுகுறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜாமின் பத்திரத்துடன், போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததை நீதிபதி கண்டுபிடித்து, மனுக்களை நிராகரித்தார்.

அதாவது, ஜாமின் பத்திரத்தில் உள்ள போட்டோவுக்கும், தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஆதார் அட்டை போட்டோவுக்கும் அப்பட்டமான முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இதை கண்டுபிடித்து நீதிபதி கேள்விகளை எழுப்பிய போது. சம்பந்தப்பட்ட ஜாமின்தாரர் தெளிவற்ற முறையில் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்.

மற்றொரு ஜாமின்தாரரோ, சவுரவ் தாஸ் பற்றிய அடிப்படை விவரங்கள் ஏதுமே தெரியாமல் கோர்ட்டில் நின்றுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் முகவரி போன்ற அடிப்படை விவரங்களை கூட தெரியாமல் இருந்திருக்கிறார்.

புதிய ஜாமின்தாரர்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை அக்.21ம் தேதி மீண்டும் நடக்கிறது.

Source link