“கருத்து வேறுபாடுகள் மோதலாக மாறிவிடக்கூடாது..” மோடி- ஜி ஜின்பிங் மீட்டிங்கில் நடந்தது என்ன?

டெல்லி: இந்தியா தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியுள்ள நிலையில், உலகின் முக்கிய தலைவர்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர். பாரத் மண்டபத்தில் இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் இப்போது மிக முக்கியமான ஒரு அமைப்பாக பிரிக்ஸ் அமைப்பு மாறியிருக்கிறது. 11 நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தாண்டு இந்தியாவிடம் இருக்கிறது. இதனால் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லியில் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாடு முக்கியமானதாக மாறியுள்ளது. சர்வதேச மோதல்கள், வர்த்தக பதற்றங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த பிரிக்ஸ் மாநாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகை அமைந்துள்ளது. டெல்லி பாலம் விமானப்படை நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்கியது. கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் டெல்லிக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி வந்த சிறிது நேரத்திலேயே சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 2025 ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் இரு தலைவர்களும் சந்தித்த நிலையில், அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மீண்டும் சீர்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆய்வு செய்யப்பட்டது. இந்தியா-சீனா உறவை நீண்டகால கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்பு கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்து வேறுபாடுகளை களைய பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான துறைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இருவரும் வலியுறுத்தினர். வேறுபாடுகள் என்பது மோதலாக மாறக்கூடாது என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்தியா சீனா உறவு பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்று கொள்கைகளின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினையும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெற்றது. எல்லையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிப்பது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். எல்லை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோல் எல்லை பிரச்சினைக்கு நியாயமான முறையில் ஏற்று கொள்ளக்கூடிய மற்றும் இரு தரப்புக்கும் சம்மதமான தீர்வை காண வேண்டும் என்ற உறுதியை இந்தியாவும் சீனாவும் மீண்டும் தெரிவித்துள்ளன.

2020 ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இந்தியா சீனா உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நீண்டகால ராணுவ பதற்றம் நீடித்தது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மீண்டும் சீர்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இருதரப்பு பொருளாதார உறவுகள் குறித்தும் மோடி- ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான சிக்கலை தீர்க்க வேண்டிய அவசியத்தை இரு தலைவர்களும் ஏற்று கொண்டனர். குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் நிலவும் சமநிலையின்மை மற்றும் விநியோகச் சங்கிலி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகளையும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்தியா-சீனா நாடுகள் பிரிக்ஸ் அமைப்புக்குள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார். இரு நாடுகளும் ஒன்றின் பலத்திலிருந்து மற்றொன்று கற்றுக்கொண்டு, பொதுவான வளர்ச்சியை நோக்கி செயல்பட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.