கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் ஸ்டாலின் படத்துக்கு திமுக மேயர் தடை

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைப்பதற்கு, தி.மு.க.,வை சேர்ந்த மேயர் கவிதா தடை விதித்தார்.

கரூர் மாநகராட்சியில், கடந்த வாரம் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தின்போது, கூட்டரங்கில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை, தி.மு.க., கவுன்சிலர்கள் மாட்டினர்.

இந்நிலையில், மாநகராட்சி மாமன்ற கூட்டம், தி.மு.க., மேயர் கவிதா தலைமையில், நேற்று மீண்டும் கூடியது. அப்போது, கடந்த முறை வைக்கப்பட்ட ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டது.

இது குறித்து, கேள்வி எழுப்பிய தி.மு.க., மண்டல குழு தலைவர் கனகராஜ், ”கடந்த கூட்டத்தில், பெரும்பான்மை கவுன்சிலர்கள் அடிப்படையில், ஸ்டாலின் படம் வைக்கப்பட்டது. அதை அகற்றியது யார்?” என கேட்டார்.

இதையடுத்து, காங்., கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, “தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தான், கவுன்சிலர்கள் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்யலாம். அரசு விதிகளை, கவுன்சிலர்கள் பெரும்பான்மை அடிப்படையில் மாற்ற முடியாது,” என்றார்.

இதற்கு விளக்கம் அளித்த மேயர் கவிதா, “கவுன்சிலர்கள் சார்பில் மேயராக தேர்வு செய்யப்பட்டாலும், கட்சி சார்பற்று செயல்பட வேண்டும். ‘புரோட்டோகால்’ படி முன்னாள் முதல்வர்கள் படங்களை வைப்பதில்லை.

”போட்டி போட்டுக்கொண்டு, தன் படத்தை வைப்பதை, முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் விரும்ப மாட்டார். மக்கள் பிரச்னைகளை பேச வேண்டிய இடத்தில், கூச்சல், குழப்பம் வேண்டாம்,” என தெரிவித்தார்.

Source link