சென்னை: ‘மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும். ‘நீட்’ தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும்’ என, முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ‘நீட்’ தேர்வு குளறுபடிகளை எதிர்த்து, டில்லியில் நடந்த இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்திய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
‘நீட்’ தேர்வை அறவே அகற்ற வேண்டும் என்பதே, தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற நிலைப்பாடு.
மாணவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் பாதிக்கும், ‘நீட்’ தேர்வை வைத்து, ஓட்டு அரசியல் செய்வதற்காக, பொய் வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்க மாட்டோம்.
‘நீட்’ தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் எனில், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் சட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்கால தீர்வாக, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
அதன் வாயிலாக, கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில், மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க, வழி செய்ய வேண்டும்.
இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்கால தீர்வை நோக்கிய என் பார்வை. மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும், மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
