காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டகீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த பதிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி, காவிரியின் குறுக்கே எந்தவொரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற எந்த மாநில அரசின் ஒப்புதலையும் கர்நாடகா பெறவேண்டும் என்ற அவசியமில்லை என 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும்,…
— Udhay (@Udhaystalin) July 28, 2026
மத்திய அமைச்சரின் இந்த பதிலைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார் என்றும்; இந்த பிரச்னையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று மத்திய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடகாவில் படவசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த சோபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை என்றும், இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் என்பதால், மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே விவகாரத்தில் ‘வி த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று… pic.twitter.com/kEoqo6VXac
— K.Annamalai (@annamalai_k) July 28, 2026
கடந்த 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்த ஒரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்த பதில் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின் (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப் பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
