கல்வராயன் மலையில் வாழும் 172 கிராம பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கு; தமிழக அரசுக்கு ஐ.ஜே.கே கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் 172 கிராம பழங்குடியின மக்களின் நில உரிமையைச் சட்டப்பூர்வமாகவும் நிரந்தரமாகவும் உறுதி செய்ய, அவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் நிலப்பட்டா வழங்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜே.கே) தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள 172 கிராமங்களில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் நில உரிமையை உறுதி செய்ய வேண்டியது அரசின் முக்கியமான கடமையாகும். பல ஆண்டுகளாக அந்த மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வனத்துறை மூலம் பட்டா வழங்குவதற்கு பதிலாக, வருவாய்த்துறை மூலம் முறையான நிலப்பட்டா வழங்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களின் நில உரிமை சட்டப்பூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்படும். மேலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். பட்டா என்பது வெறும் ஓர் ஆவணம் அல்ல, அது ஒரு குடும்பத்தின் உரிமை, பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் நம்பிக்கை ஆகும்.

எனவே, தலைமுறைகளாக அந்த நிலங்களில் வசித்து, விவசாயம் செய்து வரும் மக்களை தொடர்ந்து வனத்துறை சார்ந்த நடைமுறைகளுக்குள் வைத்திருப்பது அவர்களின் உரிமையை முழுமையாக உறுதி செய்யாது.

எனவே, கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள 172 கிராமங்களையும் முறையாக ஆய்வு செய்து, தகுதியான பழங்குடியின மக்களுக்கு வருவாய்த் துறை பட்டா வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நில அளவை, ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தி, எந்தவித அலைச்சலும் இல்லாமல் அவர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். பழங்குடியின மக்களின் நிலம் அவர்களின் உரிமை, அந்த உரிமைக்கு அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Source link