கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ஒன்றியத்திற்குட்பட்ட விளாநெல்லி, பெரும்பூர் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தங்கத்தமிழன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநிலத் தலைவர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவர் கே.ஐ. மணிரத்தினம் கலந்து கொண்டு, ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கினார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கே.ஐ. மணிரத்தினம் பேசுகையில், “மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்குக் தயாராக உள்ளேன். எனவே மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இப்பகுதி மாணவ மாணவிகள் கல்வியை நல்ல முறையில் பயின்று உயர்ந்த நிலைக்கு செல்வோம் என்பதை உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதி மக்கள் உடல்நலப் பாதிப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக சுமார் 30 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. விளாநெல்லி கிராமத்திலிருந்து பாலப்பட்டு கிராமத்திற்கு 3 கிலோமீட்டர் தூரத்திற்குப் புதிய சாலை அமைத்துக் கொடுத்தால், மக்கள் குறுகிய வழியில் சுமார் 40 நிமிடங்களில் நகர்ப்பகுதிக்குச் சென்று மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற முடியும். எனவே, தமிழக முதல்வர் கருணையுடன் பரிசீலித்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி 3 கி.மீ தூரம் புதிய சாலை அமைத்துத் தர வேண்டும்” என்றார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், நலிவடைந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மோவூர் குணசேகருக்கு மிதிவண்டி வழங்கினார். மேலும், இளங்கலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஷண்முகிந்திக்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் மருத்துவர் கண்ணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், மணிமொழி, முத்தமிழ்செல்வி, இளையராஜா, கடலூர் மாவட்ட வீராணம் ஏரி ராதா மதகு பாசன சங்க தலைவர் ரங்கநாயகி, காங்கிரஸ் கள்ளக்குறிச்சி வட்டாரத் தலைவர் சரன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர் தேவராஜ் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கோவிந்தராஜ் சஞ்சய், ஜானு ஜாகிர் உசேன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
