கழிப்பறைகள் சுத்தமாக இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் புகார்

சென்னை: ‘கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது’ என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.

பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 80க்கும் மேற்பட்ட சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இதில், அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: என்னிடம் வரும் மனுக்கள், செயலி வாயிலாக முன்னுரிமை அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. பின், அவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன; அதன் வாயிலாக பயனடைந்தோர்; அவர்களின் கருத்துகள் போன்றவை ஆவணப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு உங்களுக்காக பணி செய்யவே, சோறு, தண்ணீர் கூட சரியாக உண்ணாமல், இரவு, பகல் பார்க்காமல் உழைக்கிறேன். இதில் வேறு எந்த பாசாங்கும், நடிப்பும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தமி ழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பொதுச்செயலர் ஞானசேகரன் பேசியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு, கழிப்பறை சுத்தமாக இல்லாதது, ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப் பள்ளிகளில், 55 லட்சம் மாணவர்கள் படித்தனர். தற்போது, 45 லட்சம் மாணவர்களே உள்ளனர். இதை சரி செய்யாமல் பள்ளி நடத்த முடியாது. அரசு முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், பல்வேறு ஆசிரியர் சங்கத்தினரும், காலி பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பார்வையற்ற ஆசிரியர் கோரிக்கை ஏற்பு

தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் திவாகர் பேசுகையில், ”டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது, பார்வையற்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது. ‘ ‘அதனால், 4 சதவீத இட ஒதுக்கீடை பரிசீலிக்க வேண்டும். பாடநுால்கள் வெளிவரும் போதே, எங்களுக்கான ‘பிரெயிலி’ எனும் புள்ளி எழுத்து உள்ள நுால்களும் வழங்கினால், ஆரம்ப காலம் முதல், பாடங்களை சிறப்பாக நடத்த வசதியாக இருக்கும்,” என்றார். அதற்கு, ‘இந்த பாடநுால்கள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அமைச்சர் தெரிவித்தார்.

Source link