கஸ்டமைஸ் சோஃபாவில் நடந்த தவறு; கடைக்காரரை கதறவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்: வாடிக்கையாளருக்கு ரூ.88,000 இழப்பீடு

எழுதியவர்: வினீத் உபாத்யாய்

விற்பனையாளர் தெரிவித்த அளவை விட 10 இன்ச் கூடுதல் அகலத்துடன் ஒற்றை சீட்டர் சோஃபாக்களை வழங்கிய ஃபர்னிச்சர் கடைக்கு, வாடிக்கையாளருக்கு ரூ.83,000 தொகையைத் திரும்ப வழங்குமாறு பெங்களூரு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர் பணத்தை திரும்ப கேட்டபோது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ரீஃபண்ட் கிடையாது என்ற கொள்கையைக் காரணம் காட்டி கடை நிர்வாகம் பணம் தர மறுத்ததுடன், சோஃபாக்களை மாற்றியமைத்துத் தருவதாகக் கூறியது. 

ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க

இதனையறிந்த நுகர்வோர் ஆணையம், வாங்கிய முழுத் தொகையையும் வட்டியுடன் திரும்ப அளிக்கவும், நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.5,000 வழங்கவும் விற்பனையாளருக்கு உத்தரவிட்டது. பெங்களூரு நகர்ப்புற 2-வது கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் வி.அனுராதா மற்றும் உறுப்பினர்கள் எச்.ஜனார்த்தன், ஷாராவதி எஸ்.எம் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரைச் சேர்ந்த ரத்னேஷ் நிகாம் என்பவர் ஃபர்னிச்சர் கடைக்கு எதிராகத் தாக்கல் செய்த புகாரை விசாரித்தது.

“எதிர்மனுதாரர் சரியான அளவுள்ள பொருளை மாற்றியும் தரவில்லை, இதுவரை பணத்தையும் திருப்பித் தரவில்லை என்பது சேவை குறைபாடன்றி வேறில்லை. மேலும் இது எதிர்மனுதாரரின் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்” என்று ஆணையம் செப்டம்பர் 28 அன்று தெரிவித்தது.

2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி நிகாம் ஒரு த்ரீ-சீட்டர் மற்றும் இரண்டு சிங்கிள் சீட்டர்களைக் கொண்ட சோஃபா செட்டை ஆர்டர் செய்தபோது இந்த சர்ச்சை உருவானது. கடையின் விற்பனையாளர் தெரிவித்த அளவுகள், டெலிவரி செய்யப்பட்ட ஃபர்னிச்சரின் அளவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும் இதனால் சிங்கிள் – சீட்டர்கள் தனது அறைக்கு மிகவும் பெரிதாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வாடிக்கையாளர் சுட்டிக்காட்டிய ’10 இன்ச் வித்தியாசம்’

புகாரின்படி, நிகாம் தனது கிரெடிட் கார்டு இ.எம்.ஐ வசதி மூலம் ரூ.83,000 செலுத்திவிட்டு பீஜ் நிறத் துணி, இருக்கை ஆழத்தை 22 இன்ச்சிலிருந்து 23 இன்சாக உயர்த்துவது மற்றும் மரச்சட்டத்திற்கு இருண்ட வால்நட் ஃபினிஷிங் ஆகிய 3 மாற்றங்களை  கேட்டுள்ளார். கடையின் விற்பனைப் பிரதிநிதி ரமேஷ், சிங்கிள்- சீட்டரின் அளவை வாட்ஸ்அப் மூலம் நீளம் 41 இன்ச், அகலம் 37 இன்ச், உயரம் 41 இன்ச் எனப் பகிர்ந்து கொண்டதாக வாடிக்கையாளர் கூறினார். 

இருப்பினும், டெலிவரி செய்யப்பட்ட சிங்கிள் – சீட்டர்கள் நீளம் 37 இன்ச், அகலம் 47 இன்ச், உயரம் 38 இன்ச் இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றின் அகலம் அவருக்கு தெரிவிக்கப்பட்ட அளவை விட 10 இன்ச் அதிகமாக இருந்தது. தவறான அளவை வழங்கியதை விற்பனையாளர் ஒப்புக்கொண்டதாக நிகாம் குற்றம் சாட்டினார். அந்த ஃபர்னிச்சர் தன் அறைக்கு பெரிதாக இருப்பதாகவும், சிங்கிள் சீட்டர்களின் அளவை குறைப்பது முழு செட்டின் தோற்றத்தையும் சீரான தன்மையையும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

கடை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. ஃபர்னிச்சரின் விகிதாச்சாரம் மற்றும் ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பராமரிக்க தங்கள் உற்பத்தித் குழு அகலத்தை 47 இன்சாக உயர்த்தியதாக கூறியது. மேலும் இந்த மாற்றம் குறித்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் வாய்மொழியாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தது. சிங்கிள்- சீட்டர்களை மாற்றி அமைப்பதன் மூலம் இந்த சிக்கலை சரிசெய்ய முடியும் என்று விற்பனையாளர் கூறியதுடன், அவற்றை எடுத்துச் சென்று மாற்றித் தருவதாகக் கூறிய தங்கள் சலுகைக்கு நிகாம் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது.

வாடிக்கையாளரின் புகாரையும் மீறி ரீஃபண்ட் செய்ய மறுத்த கடை

பணத்தை திரும்பக் கேட்டு 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 25 தேதியிட்ட வழக்கறிஞர் நோட்டீஸை அனுப்புவதற்கு முன்பு, நிகாம் செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தீர்வைத் தேடியுள்ளார். கடை நிர்வாகம் மே 8, 2025 அன்று பதிலளித்து, கோரிக்கையை நிராகரித்ததுடன், வடிவமைப்பை பாதுகாக்கவே அளவுகள் மாற்றியமைக்கப்பட்டன என்பதில் உறுதியாக இருந்தது.

ஆணையம் புகார், விற்பனையாளரின் பதில் மற்றும் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தது. சிங்கிள் – சீட்டர் அகலத்தை 47 இன்சாக மாற்றியமைத்ததை விற்பனையாளர் ஒப்புக்கொண்டதை ஆணையம் சுட்டிக்காட்டியது. சோஃபா செட்டிற்கு இரண்டு ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்ததையும் ஆணையம் கவனத்தில் கொண்டது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டிய கடமை விற்பனையாளருக்கு உள்ளது. ஆனால் சரியான அளவீடுகளுடன் கூடிய ஃபர்னிச்சரை வழங்கவோ அல்லது வாங்கிய தொகையைத் திரும்ப பெறவோ இல்லை என்று கூறியது.

பிப்ரவரி 16, 2025 முதல் தொகை வசூலாகும் வரை ஆண்டிற்கு 6 சதவீத வட்டியுடன் ரூ.83,000 தொகையைத் திரும்ப வழங்குமாறு ஃபர்னிச்சர் கடைக்கு ஆணையம் உத்தரவிட்டது. மேலும் நிகாமிடமிருந்து சோஃபா செட்டை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் கடைக்கு உத்தரவிட்டது. புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.3,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.2,000 வழங்குமாறு விற்பனையாளருக்கு ஆனையம் மேலும் உத்தரவிடப்பட்டது.

நினைவில் கொள்ள வேண்டியவை

கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஃபர்னிச்சரின் அளவுகளை எழுத்துப்பூர்வமாகப் பெறுங்கள் மற்றும் அனைத்து கொள்முதல் பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். ஒப்புக்கொள்ளப்பட்ட விவரக்குறிப்புகளிலிருந்து மாறுபட்ட ஃபர்னிச்சரை விற்பனையாளர் டெலிவரி செய்து, பிரச்சனைக்குத் தீர்வு காணத் தவறினால், நிவாரணத்திற்காக நீங்கள் நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம்.

நுகர்வோர் தொடர்பான குறைகளுக்கு, தனிநபர்கள் தங்களது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நுகர்வோர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது உதவிக்கு தேசிய நுகர்வோர் உதவி மையத்தை 1915 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Source link