‘காக்கி டவுசர்’ நிர்மல்குமார் இன்னும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசியாகவே உள்ளார்: அன்பில் மகேஷ் தாக்கு

திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து முதல்வர் விஜய் பேசியதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே.என்.நேரு பேசிய முக்கிய விவரங்கள்:

“ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டால் பதிலளிக்காமல், சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் மிசா சட்டம் எனக் கூறி முதல்வர் திசை திருப்ப முயல்கிறார்.

ஸ்டாலின் மிசாவில் சிறைசென்றதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களும் கைவசம் உள்ளன. அமைச்சர் நிர்மல்குமார் அதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

திமுக என்றைக்குமே தன் தோழமைக் கட்சிகளை விட்டுக்கொடுத்ததில்லை, இனியும் விட்டுக்கொடுக்காது. கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறுவதற்கு திமுக காரணமல்ல. 

சினிமாவில் வசனம் பேசுவது போல் பேசாமல், திமுக கேட்கும் நேரடிக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் பாஜகவை நேரடியாக விமர்சிக்கத் தயங்குவது ஏன்” என்றும் கேள்வி எழுப்பினார்.

WhatsApp Image 2026-09-12 at 6.00.13 PM

WhatsApp Image 2026-09-12 at 6.00.14 PM

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய முக்கிய விவரங்கள்:

”சட்டப்பேரவைக்கு வரும் தவெகவினர் ஏவிஎம் ஸ்டுடியோவுக்குச் செல்லும் மனநிலையிலேயே வந்து செல்கின்றனர்.

மிசா தியாகிகளை கொச்சைப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா. மாஃபா பாண்டியராஜன் மற்றும் எச்.ராஜாவைத் தொடர்ந்து தற்போது ‘காக்கி டவுசர்’ நிர்மல்குமாரும் அதையே பேசுகிறார்.

எங்கள் இயக்கத்தின் வரலாறு ஏசி ரூமில் எழுதி வாங்கிய டயலாக் பேப்பர் அல்ல; சிறைக் கொட்டடிகளிலும் போராட்டக் களங்களிலும் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு. திரையில் டூப் போட்டு சண்டை போடுவதற்கும் களத்தில் இறங்கி லத்தி அடி வாங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை இளைஞர்கள் அறிவார்கள்” என்றார்.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, கவிஞர் சல்மா மற்றும் திரளான திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

க.சண்முகவடிவேல்

Source link