புதுடில்லி: காங்கிரஸ் மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் வினாத்தாள் கசிந்துள்ளது எனக் கூறியுள்ள மத்திய அமைச்சர் நட்டா, அந்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
டில்லியில் இன்று நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல், கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் இதனால் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம்சாட்டிஇருந்தார்.
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த பாஜ மூத்த தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா நிருபர்களிடம் கூறியதாவது:
ராகுலிடம் கேள்வி
காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில், ஜம்மு காஷ்மீர் பணியாளர் தேர்வு வாரிய தேர்வு வினாத்தாள் கசிந்தது. அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் ஹிமாச்சல பிரதேச பள்ளி வாரியத் தேர்வு வினாத்தாள் கசிந்தது.காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் கூட்டணி ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹிந்தி மற்றும் அறிவியல் தேர்வு வினாத்தாள் கசிந்தது. காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்தில், இடைநிலைத்தேர்வின் மொழித்தாள்கள் கசிந்தன.
அரசியல் ஆதாயம்
மாணவர்கள் நலனை விட, ராகுலின் நலனே முக்கியம் என்பது தெளிவாகிறது. கல்வி அமைப்பை மேம்படுத்துவதும், கல்வித்தரத்தை உயர்த்துவதும், மாணவர்களுக்கு நீதி கிடைப்பதும் அவரின் நோக்கம் கிடையாது. மாறாக மாணவர்களின் பிரச்னையையும், அவர்களின் கோரிக்கைகளையும் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த விரும்புகிறீர்கள். மாணவர்களிடம் இருந்து அரசியல் ஆதாயம் பெற துடிக்கிறார். இது துரதிர்ஷ்டவசமானது.
விவாதம்
இது நமது அரசு,உங்களது அரசு என பிரித்து பேசும் நேரம் கிடையாது. வினாத்தாள் கசிவு முக்கியமான விஷயம்.
விசாரணை
ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டாமல், இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி, வினாத்தாள் கசிவுக்கான காரணம் , அதற்கு காரணமானவர்கள், வினாத்தாள் கசிவு ஏற்பட்டால், மத்திய அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆராயலாம்.
வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
தயார்
குறுகிய கால விவாதம், நீண்ட நேர விவாதம் குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் உங்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டும் என்பதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 12 மணி நேரம், 18 மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளுங்கள். ராஜ்யசபாவில் அவையின் முன்னவர் என்ற நிலையில், எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும் நேரத்தில் விவாதம் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
சந்திப்பு
சிஜேபி இயக்கத்தினர் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையில் நடந்தது. அவர்களின் கோரிக்கைகளை அமைதியாக கேட்டோம். அதனை எழுத்துப்பூர்வமாக அளித்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தோம். அவர்களும் எழுத்துப்பூர்வமாக அளித்தனர். விவாதம் நடத்த தயாராக உள்ளதாக அவர்களிடமும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு நட்டா கூறினார்.
தினமலர் நேரலை
மத்திய அமைச்சர் நட்டா டில்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி தினமலர் இணையதளம் மற்றும் யுடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனைப் பார்க்க:https://www.youtube.com/watch?v=9dyBTxjjVJk
